அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனா உலக வர்த்தக அமைப்பில் முறையீடு

சீன நிறுவனங்களுக்கு மேம்பட்ட கணினி உபகரணங்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனா உலக வர்த்தக அமைப்பில் முறையீடு செய்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் என்பதால் இந்தச் சர்ச்சையை தீர்க்கும் பொறுப்பு தற்போது அந்த அமைப்பை சார்ந்துள்ளது.
சீன நிறுவனங்களுக்கு மேம்பட்ட கணினி உபகரணங்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்த தனது நாட்டின் கவலைகளை சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் தீர்க்க வேண்டுமெனவும் சீனா கோரியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஜோ பைடன் நிர்வாகம், சீன நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் மேம்பட்ட கணினி உபகரணங்களை வாங்குவதை தடைசெய்யும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் சீனாவின் இந்த எதிர்வினை வந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோகத்தின் உறுதித் தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆயினும் அமெரிக்கா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தேசிய பாதுகாப்பு நலன்களை பாதுகாக்கும் நோக்கத்தில் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.



