சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள மியான்மரில் 4 வெளிநாட்டு கைதிகளின் திடீர் விடுதலை

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 4 வெளிநாட்டு கைதிகள் திடீரென விடுதலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மியான்மர் அரசு செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின டுன் கூறுகையில், "வெளிநாட்டு கைதிகளான சீன் டர்னல், டோரு குபோட்டா, விக்கி போமன் மற்றும் ஒரு அமெரிக்கர் என 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்" என தெரிவித்தார். இவர்களில் சீன் டர்னல், 58 வயதானவர். சிட்னி மேக்வாரி பல்கலைக்கழகத்தில் பொருளாதார இணைப்பேராசிரியராக பணியாற்றி வந்தவர். யாங்கூனில் உள்ள ஒரு ஓட்டலில் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டவர்.
இவர் மீது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் மற்றும் குடிவரவு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 26 வயதான குபோட்டா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் ஆவார்.
இவர் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி யாங்கூனில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தை படம் எடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விக்கி போமன், 56 வயதானவர்.
மியான்மரில் இங்கிலாந்து தூதராக பணியாற்றியவர். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் யாங்கூனில் அவரது கணவருடன் கைது செய்யப்பட்டார். தனது இருப்பிடத்தை பதிவு செய்யாத குற்றத்துக்காக ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மியான்மர் நாட்டில் தேசிய வெற்றி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, கைதிகள் பொது மன்னிப்பு திட்டத்தின்கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என மியான்மரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



