பாடசாலை வளாகத்திற்குள் ஹெரோயின் விற்பனை செய்த பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது
காலி ஹிக்கடுவையில உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் வளவுக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 8.229 கிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சில காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாம் படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.இதன் போது, ஹிக்கடுவை களுபே பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளம் பெண்ணே போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹிக்கடுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனைகள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பரவலாக முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் விற்பனை காரணமாக வறிய குடும்பங்களின் இளம் பிள்ளைகள் பாதிக்கப்பட்டு வருவதுடன் பெரிய சமூக பிரச்சினைகள் உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



