ஹட்டன் அருகில் உள்ள சுமார் 35 அடி ஆழமான குழிக்குள் காணப்பட்ட நிலையில் இரண்டு சடலங்கள் மீட்பு

ஹட்டன் வலப்பனை குருந்து ஓயா ஆற்றுக்கு அருகில் உள்ள சுமார் 35 அடி ஆழமான குழிக்குள் காணப்பட்ட நிலையில் இரண்டு சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் காணாமல் போனதாக பிரதேச கிராம உத்தியோகஸ்தர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தேடுதல் நடத்திய பொலிஸார் நேற்று சடலங்களை மீட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 63 மற்றும் 45 வயதான நபர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று கமத்தொழிலுக்காக செல்வதாக வீட்டில் கூறியுள்ளனர்.
எனினும் இவர்கள் புதையல் தோண்டுவதற்காக சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலங்களுக்கு அருகில் இருந்து மண் எண்ணெயில் இயங்கும் தண்ணீர் பம்பி இயந்திரம், தண்ணீர் குழாய்கள் மற்றும் சில உபகரணங்களை கைப்பற்றியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலங்கள் தொடர்பிலான நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதுடன் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலப்பனை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



