இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நாளை அடக்கம் - லண்டன் சென்றடைந்த உலக தலைவர்கள்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி கடந்த 14-ந்தேதி முதல் லண்டனில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
பல மணி நேரம் வரிசையில் காத்து இருந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நாளை நடக்கிறது. உள்ளூர் நேரப்படி நாளை காலை 6.30 மணி வரை அஞ்சலி செலுத்த மக்கள் அனுமதிக்கப்படுவர்.
அதன்பின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கும். ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் 2 ஆயிரம் உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் லண்டன் நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தார்.
அவர் சென்ற விமானம் லண்டன் அருகே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை சென்றடைந்தது. ஜோ பைடன் இன்று ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்றும் இங்கிலாந்து புதிய மன்னர் சார்லசை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராணியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட திரவுபதி முர்மு இன்று அதிகாலை லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். அதே போல மற்ற உலக நாட்டு தலைவர்களும் லண்டன் நகருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.



