எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியொன்று உருவாக்கப்படும் - உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

எதிர்காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசியல் சக்தியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டுக்கு ஏற்ற, நடைமுறைப் பணிகளைச் செய்யக்கூடிய தொழில்சார் மட்டத்திலான இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் சக்தியொன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம்.
மக்களுக்கு இன்று கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை. ஆகையால் இந்த நாட்டை மாற்றக்கூடிய மிதவாத சக்தியொன்றே நாடாளுமன்றுக்கு தேவைப்படுகின்றது.
ஆனால், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகின்றனர். அது அவர்கள் செய்யப்போகும் மிகப்பெரிய தவறு.
அவர்கள் அரசியலை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது, செய்த தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அவர்களது அரசியல் இல்லாமல் போய்விடும்” என்றார்.



