மகாராணியின் உடலம் தாங்கிய பேழை இறுதி பயணத்தை ஆரம்பித்தது

பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் நகருக்கு முழு அரசு மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இறுதி பயணத்தை ஆரம்பித்து அங்கிருந்து புறப்பட்ட பேழை எடின்பரோ ஹொலிரூட்ஹவுஸ் அரண்மணைக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
மகாராணியின் உடல் தாங்கிய பேழை 6 மணி நேரம் பயணம் செய்யவுள்ளதுடன், வீதியின் இருமருங்களிலும் கூடி மக்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நாளை மறுதினம் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்திற்கு ராணியின் உடல் கொண்டுசெல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மகாராணியின் தந்தை 6வது ஜோர்ஜ் மன்னர் நினைவாக அமைக்கப்பட்ட பாலத்தை தாண்டிச் செல்லும் போது மக்கள் 10 நிமிடம் வரை மௌன நிலையில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ராணியார் மறைந்ததன் 10வது நாள், அரசு முறைப்படி இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும். தொடர்ந்து, உத்தியோகபூர்வ சடங்குகளுக்குப் பிறகு, சவப்பெட்டி லண்டனில் இருந்து விண்ட்சர் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும், மேலும் இருபுறமும் ஊர்வலங்கள் நடைபெறும்.
விண்ட்சர் அரண்மனையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளுக்கு பின்னர், அரச குடும்பத்து உறுப்பினர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பிரத்தியேக கல்லறையில் ராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



