இன்றைய வேத வசனம் 10.09.2022: சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 10.09.2022: சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது

எந்த ஒரு செயலிலும் வெற்றியைக் காண வேண்டும் என்றால் அங்கு ஒற்றுமை அவசியம். இந்த ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவது அன்பே.

அதிலும் இறை அன்பு இருந்தால் மட்டுமே நமது ஐக்கியத்தை காத்துக்கொள்ள முடியும்.

பேதுருவின் பிரசங்கத்தினால் தங்களை அர்ப்பணித்த மக்களிடையே ஒரு புதிய ஒற்றுமையும் ஐக்கியமும் ஏற்பட்டது.

தங்கள் பிதாக்களாகிய அப்போஸ்தலர்களின் உபதேசத்திற்கு செவிகொடுத்து கீழ்ப்படிந்து நடந்தார்கள்.

ஒருவரில் ஒருவர் பரஸ்பர அன்பில் நிலைத்திருந்தார்கள். இதற்கு அடையாளமாக அப்பம் பிட்குதலிலும், ஜெபத்திலும் தரித்திருந்தார்கள்.

தன்னலமற்ற அன்பின் வெளிப்பாட்டினால் அனைத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள் (அப் 2:29-47)

கிறிஸ்தவத்தில், மும் மனிதர்கள் என்று அழைக்கப்படும் வில்லியம் கேரி, வில்லியம் வாட், ஜாஷ்வா மார்ஸ் மென் மூவரும் இணைந்து ஒற்றுமையோடு இறைப் பணியாற்றினார்கள்.

வில்லியம் கேரி வேதாகமத்தை வங்க மொழியில் மொழிபெயர்த்தார். வாட் அதை அச்சிட்டார். ஜாஷ்வா கல்விப் பணியில் ஈடுபட்டார்.

மூவரும் தங்களின் வருமானம் அனைத்தையும் பொதுவாக வைத்து தங்கள் தேவையை குறைத்து ஊழியத்திற்காக அதிகமாக செலவிட்டதன் மூலமாக, இறைப்பணியை சிறப்பாக செய்து முடித்தார்கள்.

ஆதி திருச்சபை விசுவாசிகள் ஐக்கியத்தின் ஒருமைப்பாட்டை இன்று ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

திருச்சபை என்பது கிறிஸ்துவின் சரீரம். நாம் அனைவரும் அதில் ஒரு உறுப்பாக இருந்து செயல்படுகிறோம்.

நமக்குள் ஒற்றுமையோடு செயல்பட்டால் மட்டுமே கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையை சரியாக செயல்படுத்த முடியும்.

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். (யோவான் 13:35)

இயேசுவோடு உள்ள ஐக்கியமே நம்மை மிகச் சரியாக வாழத் தூண்டும். திருச்சபையில் ஐக்கியப்படுவோம் தேவ அன்பினால் ஐக்கியத்தில் நிலைத்திருப்போம். ஆமென்.

சங்கீதம் 133:1

இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?