மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்படுவார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தீவிரமான நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற எவரேனும் தயாரானால் அது வெறும் கனவாகவே போகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழிக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன வலுவாக இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தும் பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், அதற்காக கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
தமது கட்சி குறித்த மக்களின் கருத்தை எதிர்வரும் தேர்தலில் காணமுடியும், மக்கள் தமது கட்சியை நிராகரித்தால் கட்சி என்ற ரீதியில் அதனை ஏற்றுக்கொள்ள தயார் எனவும் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கட்சியின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார் எனவும் எதிர்வரும் தேர்தலில் அவரது தலைமையில் கட்சி போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.



