இன்றைய வேத வசனம் 24.06.2022: தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 24.06.2022: தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்

பவுல் அப்போஸ்தலனைவிடச் சாத்தானின் நேரடியான தாக்குதலுக்கு ஆளானவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது என்றே நான் சொல்வேன்.

அவர் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார் என்று பாருங்கள். அவருடைய ஆடைகளைக் களைத்து போட்டு அவரை அடித்தார்கள். ஒவ்வொரு அடியும் அவருடைய சரீரத்தையே நேரடியாகத் தாக்கியது!
ரோமர்கள் மட்டுமல்ல, யூதர்களும் கூட இப்படிச் செய்தார்கள். அவருடைய முதுகில் சாட்டையானால் தாக்கி, அவர் தனது மேலான அழைப்பைவிட்டுப் பின்வாங்குமாறு செய்ய முயன்றார்கள்.

அந்த நாட்களில் சாட்டையடி என்பது எளிதான காரியமல்ல. சிலர் சாட்டையடியினால் மரித்துக்கூடப் போயிருக்கிறார்கள்.

சாட்டையடியின் தழும்புகள் ஒருநாளும் மறைவதில்லை.
பவுல் இப்போது என்ன செய்யப் போகிறீர்? என்று அவரிடம் கேட்டால் அவர் என்ன சொல்லுகிறார்?
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி தொடருகிறேன்" என்று அவர் பதில் அளிக்கிறார்.

அவர் கல்லால் எறியப்பட்ட போது பாருங்கள். பெரிய அப்போஸ்தலனாகிய அவர்மீது ஏறிய யூதர்கள் பெரிய கற்களை எடுத்துக்கொண்டார்கள். அவர் மரிக்கும்படி விட்டுவிட்டுச் சென்றார்கள்.

சரீரம் முழுவதும் இரத்தம் வழியக் கிடக்கும் அவரைப் பாருங்கள். பவுலே இந்த முறை எப்படியோ தப்பித்து விட்டீர். அரேபியாவுக்குச் சென்று ஆறு வாரம் ஓய்வெடுத்தால் என்ன?
இங்கே இருந்தால் கண்டிப்பாக உண்மைக் கொன்றுவிடுவார்கள். என்று சொல்லிப் பாருங்கள்.
அவர் என்ன பதிலளிப்பார்?

"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காய் இலக்கை நோக்கித் தொடருகிறேன்" என்று அவர் பதிலளிக்கிறார்.

அவர் ஓய்வெடுக்கச் செல்லவில்லை. உடனடியாகச் சுவிசேஷத்தை அறிவிக்கச் செல்கிறார்.
இந்த ஆதிக் கிறிஸ்தவர்களைப் பார்க்கும்போது, இன்றைய நமது கிறிஸ்தவர்களைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். உலக நாடுகளிலுள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் சேர்ந்தாலும் ஒரு பவுலுக்கு அவர்கள் ஈடாக மாட்டார்கள்.

அவர் தனது பரம அழைப்புக்காக மற்ற எல்லாவற்றையும் துச்சமாக எண்ணினார்.
அவர் பிரதானமான இடங்களில் தங்குவதற்கு இடம் கேட்கவில்லை. தனது பிழைப்புக்காகப் பகல் முழுவதும் கூடாரப் பணியைச் செய்துவிட்டு, இரவு நேரங்களில் பிரசங்கம் செய்தார்.

அவருக்கு உதவியாகக் குழுக்கள் இல்லை, அவரைக் கூட்டங்களுக்குக் கூட்டிச் செல்ல வாகனங்கள் இல்லை. அவருடைய செலவுகளைக் கவனிக்க எவருமில்லை. என்றாலும் அவர் தயங்கவில்லை.

இப்படிப் 18 மாதங்கள் அவர் கடுமையாக உழைத்த பிறகு அவருக்குக் கிடைத்த பரிசு என்ன?
தெருமுனைக்கு அவரை இழுத்துச் சென்று அவருக்கு ஒன்று குறைய 40 சாட்டையடிகளைக் கொடுக்கிறார்கள். என்றாலும் அவர் தனது பரம அழைப்பைவிட்டுப் பின்வாங்கவில்லை.

பிலிப்பிய சிறையிலிருக்கும் அவரிடம் போய் இப்போது என்ன செய்யப் போகிறார் என்று கேளுங்கள்.
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்கிறேன்" என்று அவர் பதிலளிப்பார்.

அவர் தனது பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்ந்தபோது, எவருமே, எதுவுமே அவருக்கு முன்னால் வந்து அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதுவே கிறிஸ்தவ வைராக்கியமாகும்.

இதனால்தான் கிறிஸ்தவ சபை வரலாற்றிலேயே பவுலின் ஊழியத்தின் வினைப்பயன்களைப்போல வேறு எவரும் வினைப்பயன்களைப் பெறவில்லை!

ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (#பிலிப்பியர் 3:13,14) ஆமென்!!