இலங்கையின் பொருளாதார நெருக்கடி மனிதாபிமான அவசரநிலை ஏற்படும் அபாயம்! ஐ.நா எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதாரம் பல தசாப்தங்களில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இலங்கை உள்ளதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் (OCHA) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கையின் 22 மில்லியன் மக்கள் ஏழு தசாப்தங்களில் மிகக் கடுமையான நிதி நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.
இது ஒரு முழுமையான மனிதாபிமான அவசரநிலையாக உருவாகலாம் என்று நாங்கள் கவலைப்படுகிறோம் என்று OCHA செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லேர்க் ஜெனிவாவில் வழக்கமான ஐ.நா. செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 47.2 மில்லியன் டாலர் உதவியை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் முகவரான யுனிசெப்பின் இலங்கையின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கையில் 70% குடும்பங்கள் ஏற்கனவே உணவு நுகர்வைக் குறைத்துள்ளதாகவும், இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.