பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி

வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள "கோத்தபாய கடற்படை கப்பல்' என்னும் கடற்படை முகாமுக்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களத்தினரால் இன்று(7) மேற்கொள்ளப்பட்ட முயற்சி காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ள 617 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு நில அளவை திணைக்களத்தினரின் ஒத்துழைப்போடு அளவீடு செய்து காணி சுவீகரிப்புக்கு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மக்கள் தமது எதிர்ப்பு போராட்டங்களால் முறியடித்துள்ளனர்.



