ஹட்டன் நகரில் மண்ணெண்ணெய் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் நகரின் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் பிரதான வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமை ஏற்படுத்தக் கோரி இன்று காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் – கண்டி போன்ற பிரதான வீதியினூடான போக்குவரத்து பல மணிநேரம் ஸ்தம்பிதமடைந்தது.
இதேவேளை, எரிவாயு கோரி கொழும்பு - முகத்துவாரம் பிரதான வீதியின் அளுத்மாவத்தை பகுதியில் வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் எரிவாயு கொள்கலன்களால் வீதியை மறித்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் அந்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



