வடக்கு, கிழக்கு ஆயர்கள் விடுத்துள்ள விசேட கோரிக்கை

#SriLanka #NorthernProvince
வடக்கு, கிழக்கு ஆயர்கள் விடுத்துள்ள விசேட கோரிக்கை

அமைதியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டமைக்கு கூட்டாகக் கண்டங்களை தெரிவித்துள்ள வடக்கு கிழக்கு ஆயர்கள், மே 18 நினைவேந்தலை அனைவரும் முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மனுவேல் பெர்ணான்டோ, மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா, திருமலை ஆயர் நோயல் இம்மானுவேல் ஆகியோர் இவ்வாறு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள கூட்டுக்கோரிக்கை ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே மாதம், இலங்கையில் முரண்பாடான உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.வடக்கு-கிழக்கு தமிழினப் படுகொலையில் இறந்தவர்களை நினைவு கூறுகையில், தெற்கு போர் வெற்றியைக் கொண்டாடுகின்றது.

கௌதம புத்தர் கூறியது போன்று மூன்று விடயங்களை மூடி மறைக்க முடியாது. 'சூரியன், சந்திரன், உண்மை'. சிறிலங்காவின் பொருளாதார – அரசியல் நெருக்கீடு தெளிவான பாடத்தைப் புகட்டி இருக்கின்றது, வன்முறை எந்தவிதத்திலும் பிரச்சினைக்குத் தீர்வாகாது, பிரச்சினைக்கான மூலகாரணியைக்கண்டு அதை நிவர்த்தி செய்வது இன்றியமையாதது.

வடக்கு-கிழக்கு தமிழர்கள் மே 18 ஐ தமிழினப்படுகொலை நாளாக நினைவு கூருகின்றனர்.போரின் விளைவால் இறந்து போன, அவையங்களை இழந்த, சொத்துக்களை, நிலத்தை இழந்த மக்களுடனும், பல இடப் பெயர்வுகளைச் சந்தித்த மக்களுடனும் நாங்கள் ஒன்றாகப்பயணித்தே வந்திருக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுதல், சமய விழிபாடுகளை, நினைவேந்தல்களை ஒருங்கிணைத்தல் என்பன நினைவுத் திறத்தினை தக்கவைத்தலின் முயற்சிகளே. பல தசாப்தங்களாக நீடித்த இனப்படுகொலை நிகழ்முறை முள்ளிவாய்க்காலில் உச்சத்தைத் தொட்டது. இறந்தவர்களை நினைவு கூருகின்ற உரிமை நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் அடிப்படையானது என்பது மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் அடக்குமுறையை பயன்படுத்தி நினைவேந்தலை படைத்துறை நசுக்கி  வந்துள்ளது. இலங்கை அரசியல்-பொருளாதார நெருக்கீட்டை நீண்ட காலமாக எதிர்கொண்டு வந்துள்ளது. அமைதியான போராட்டமுறைமை ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பு சார்ந்தது, அது ஒரு குற்றமல்ல.

திருத்தந்தை கூறியது போல 'தலைவர்கள் மந்தையின் வாசனையை அறிந்திருக்க வேண்டும்'. மக்களின் கூக்குரலுக்கு செவிமடுத்தல் என்பது தலைமைத்துவத்தின் தவிர்க்க இயலாத பண்பு.  மக்களின் கோரிக்கைகளும், அபிலாஷைகளும் கூட்டுப்பிரதிநிதித்துவமாகக் கருதப்பட்டு பிரச்சினைக்கான மூல காரணம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். அடக்கு முறையைப் பயன்படுத்தி கூட்டுக்கோரிக்கையை மௌனிக்கச் செய்தல் ஆரோக்கியமானது அல்ல.உண்மை மட்டுமே விடுதலை தரும்'.

பல சமயங்களையும் கலாச்சாரங்களையும் இனங்களையும் கொண்ட இலங்கையின்  வரலாற்றியல் வன்முறைப் பண்பாட்டையும், தண்டனை விலக்கீட்டையும் நெறிமுறையாக உள்வாங்கியுள்ளது. அதற்கு அண்மையில் அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை மிகச்சிறந்த உதாரணம்.

வடக்கு-கிழக்கு ஆயர்மன்றத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசின் ஆதரவுடன் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையை வன்மையாகக் கண்டிப்பதோடு எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மிக மோசமான நெருக்கீடு தொடர்பில் மிகுந்த அக்கறையும், கவலையும் கொண்டுள்ளோம்.

அரசியல் கட்டமைப்பு மாற்றம் தொடர்பிலான கூட்டுக் கோரிக்கை, தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் உள்வாங்க வேண்டும். இனக்குழுமங்களின் தனித்துவமான பண்புகள் தக்கவைக்கப்பட்டு போற்றப்பட வேண்டுமே தவிர அவற்றை 'மற்றமையாக' கட்டமைத்து பெரும்பான்மையின இருப்பிற்கெதிரான  அச்சுறுத்தலாக கட்டமைக்கக்கூடாது.

உண்மையை ஏற்றுக்கொள்ளல் எதிர்காலத்தில் முற்போக்காக பயணிப்பதற்கான முதற்படி. பிரச்சினைக்கான அடிப்படை காரணியை ஏற்றுக்கொண்டு நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு அர்ப்பணிப்பு தேவைப்படுகின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார – அரசியல் நெருக்கீட்டை தனியான உதிரியாகப் பார்க்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார – அரசியல் நெருக்கீட்டுக்கும் அரச கட்டமைப்புக்கும் இடையே அடிப்படைத் தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசினாலும் அதன் படைத்துறையாலும் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை நாளாக மே 18ஐ அனுஷ்டிக்குமாறு மானிடக்குலத்தை மதிக்கும் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4