ஜூன் 1உடன் வழமைக்கு திரும்பும் ஷாங்காய் - ஊரடங்கு தளர்வு
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் முதல் அலையின் போது, சீன அரசு ‘பூஜ்ய கொரோனா கொள்கை’ (Zero Covid policy) என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. அதாவது சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதற்காக அந்நாட்டு அரசு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த திட்டங்கள் பலன் அளித்த காரணத்தால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்தது.
சர்வதேச பயணத்தை தடை செய்வது, பொருளாரம் மற்றும் வணிக ரீதியிலான தொடர்புகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால், சீன அரசின் நடவடிக்கைக்கு சில கண்டனங்களும் எழுந்தன. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சீன அரசு ஆலோசித்து வந்தது.
இந்நிலையில் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், ‘பூஜ்ய கொரோனா கொள்கை’ அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர சீன அரசு முடிவு செய்தது. இதன்படி சீனாவின் முக்கிய மாகாணங்களில் மிகத் தீவிரமான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் ஷாங்காய் மாகாணத்தில் சுமார் 6 வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. மொத்தம் 16 மாவட்டங்களைக் கொண்ட ஷாங்காய் மாகாணத்தின் 15 மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், ஊரடங்கை தளர்த்துவதற்கு மாகாண அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஷாங்காய் மாகாணத்தில் ஊரடங்கை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருந்தகங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனையகம் உள்ளிட்டவற்றை முதலில் திறக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே போல் டேக்சி சேவைகளுக்கு மே 22 முதல் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



