கீவ் நகரில் மே 17-ம் தேதி முதல் செயல்படும் இந்திய தூதரகம்

#Ukraine
Prasu
4 years ago
கீவ் நகரில் மே 17-ம் தேதி முதல் செயல்படும் இந்திய தூதரகம்

உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை அடுத்து, கீவ் நகரில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் மூடப்பட்டு, அண்டை நாடான போலந்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், உக்ரைன் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் செயல்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி திமித்ரி குலேபா, ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடனான கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, பல ஏவுகணைகளை ஏவக்கூடிய ராக்கெட் அமைப்புகள், ராணுவ விமானங்கள் உட்பட அதிக ஆயுதங்களை வழங்குமாறு ஜி7 நாடுகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ராணுவ ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார். ரஷியாவின் கச்சா எண்ணெய் மீதான தடைக்கான ஒப்பந்தம் வரும் நாட்களில் எட்டப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்குவதன் வாயிலாகவும், ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமும், ரஷியா மீதான அழுத்தத்தை தொடர வேண்டியது அவசியம் என பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் தெரிவித்தார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள பல கிராமங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்களை நடத்தியதாகவும், அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளை விரிவுபடுத்த முயன்றதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. அதேசமயம், ரஷியாவின் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்றும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. 

உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் தொடங்கியதில் இருந்து ரஷியா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதார விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளால் பல நாடுகள் உணவுத் தட்டுப்பாடு அபாயத்தில் உள்ளன என்றார்.

உக்ரைனுக்கான நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவி வழங்குவது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷியாவின் முன்னாள் அதிபர்  டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் நேட்டோ அமைப்பிற்கும், ரஷியாவிற்கும் இடையேயான மறைமுகமாக போர், தற்போது வெளிப்படையாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக புதினின் நெருங்கிய கூட்டாளியான டிமிட்ரி மெட்வெடேவ், குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4