நடுவானில் கிழிந்த பாராசூட்டால் மலை உச்சியில் இருந்து கீழே குதித்த வீரர் - ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

ஜானி டி ஜூலியஸ் என்பவர் தன்னை மல்யுத்த வீரர் மற்றும் பாராசூட் வீரர் (கட்டிடம், டவர், பாலம் போன்ற உயரிய பகுதியில் இருந்து அல்லது மலை உச்சியில் இருந்து) என அடையாளப்படுத்தி கொண்டவர்.
30 பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து பாராசூட்டில் இருந்து குதிக்கும் சாகச நிகழ்வை செய்து காட்ட சென்றுள்ளார். அனைவரும் பாராசூட்டை விரித்து பறந்து விட, இவர் கடைசி ஆளாக குதித்துள்ளார்.
அதனை வீடியோவாக பதிவும் செய்துள்ளார். ஆனால், ஒரு சில வினாடிகளிலேயே இவரது பாராசூட் கிழிந்து விட்டது. இதனால், வானில் பறப்பதற்கு பதிலாக மளமளவென மலை உச்சியில் இருந்து கீழே போயுள்ளார். சமநிலையை அடைவதற்காக, ஓரிடத்தில் தன்னை நிலை நிறுத்துவதற்காக போராடியுள்ளார்.
காற்றின் வேகத்தில் சென்ற அவரது பாராசூட் மலையின் மற்றொரு உச்சியில் சென்று சிக்கி கொண்டது. இதனால், ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரை மலையில் தொங்கியபடி போராடியுள்ளார்.
கடைசியாக கீழே குதித்த இவரை கவனிக்க பின்னால் வேறு ஆட்களும் இல்லை. இதனால், அவரை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனினும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படாதது ஆறுதல் அளித்துள்ளது.
இதன்பின்பு, ஒரு வழியாக போராடி மலை மீது ஏறி மீண்டு வந்துள்ளார். அதிபயங்கர சாகச நிகழ்வில் ஈடுபட்டு பார்ப்பவர்களை திகிலின் உச்சத்திற்கு கொண்டு சென்ற இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட உள்ளார். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை வீடியோ பார்க்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் லைக்கும் செய்துள்ளனர். விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
உயரிய பகுதியில் இருந்து பாராசூட்டில் கீழே குதித்து செய்யும் சாகச விளையாட்டு ஆபத்து நிறைந்த ஒன்று. தெற்கு பிரான்சில் விடுமுறையை நண்பர்களுடன் கழிக்க சென்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 34 வயது நபர், மலை உச்சியில் இருந்து பாராசூட்டில் குதித்துள்ளார்.
ஆனால், சரியான சமயத்தில் பாராசூட் விரிய தவறி, விபத்தில் சிக்கினார். கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
இதேபோன்று, 2 நாட்களுக்கு முன் சான் டீகோ நகரில் 23 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இருந்து பாராசூட்டில் குதித்த 48 வயது நபர் ஒருவர் தனது 16 வயது மகளின் கண் முன்னாலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.
277 அடி உயர கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தபோது, பாராசூட் சரியாக விரியவில்லையா? அல்லது வேறு ஏதேனும் சிக்கலா? என்பது தெரியவில்லை. இதற்கு முன் அவர் பல்வேறு வகையான சாகசங்களை செய்துள்ளார்.



