உக்ரைனில் இருந்து பெற்றோர் இல்லாமல் தனியாக 1,000 கிலோ மீட்டர் கடந்து ஸ்லோவாகியா நாட்டிற்குள் நுழைந்த 11 வயது சிறுவன்

உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன
இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இதனிடையே, ரஷியா நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைனில் இருந்து பொதுமக்கள் போலாந்து, ஸ்லொவாகியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ் ஆகிய அண்டை நாடுகளுக்கு அகதிகளாக நுழைந்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து பெற்றோர் இல்லாமல் தனியாக 11 வயது சிறுவன் 1,000 கிலோ மீட்டர் கடந்து ஸ்லோவாகியா நாட்டிற்குள் நுழைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அமைந்துள்ள ஷப்ரிஹிஹியா நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது. அந்த பகுதியில் அந்த 11 வயது சிறுவன் தனது தாய் யூலியா வலோடிமிரிவ்னா பெசிகா மற்றும் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார்.
ரஷிய படைகள் நெருங்கி வருவதால் சிறுவனின் தாய் யூலியா தனது உறவினரை விட்டு வர முடியாது என்பதால் தனது மகனை மட்டும் அனுப்பி வைத்துள்ளார். தனது மகனின் கையில் செல்போன் எண்ணை எழுதி, எல்லையை கடப்பதற்கான பாஸ்போட்டையும் மகனிடம் கொடுத்து ரெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து, அந்த சிறுவன் ரெயிலில் பயணித்தும், நடத்தும் என பல்வேறு நபர்களின் உதவியுடனும் சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் தனியாக பயணித்து நேற்று ஸ்லொவாகியா நாட்டிற்குள் நுழைந்துள்ளார். ஸ்லொவாகியாவுக்குள் நுழைந்த அந்த சிறுவனை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், தனது மகனை வரவேற்ற ஸ்லொவாகியா அதிகாரிகளுக்கு சிறுவனின் தாய் யூலியா நன்றி தெரிவித்துள்ளார்.



