பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது எமது கடமை!

Prathees
2 years ago
பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது எமது கடமை!

பெண் என்பவள் ஈரெழுத்து தாங்கி நிற்கும் இமயம் ஆவாள். கருவறை இருளில் தொடங்கி கல்லறைக்கு செல்லும் வரை பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து அவற்றில் வெற்றியும் கண்டு தனது சாதனைகள் மூலம் சரித்திரம் படைக்கிறாள் பெண். இவ்வாறான மங்கையர்களுக்கு மகுடம் சூட்டுவதற்காக உலக நாடுகள் தோறும் வருடாவருடம் வெவ்வேறு தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் பெண்கள் தமது உயிரையும் தியாகம் செய்து தமது உரிமைகளை பெற்றெடுத்த வரலாறுகள் ஞாபகமூட்டப்பட்டு, பெண்ணுரிமை சமத்துவம் மற்றும் அனைத்துவித வன்முறை, துஷ்பிரயோகம் என்பவைகளில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல் தொடர்பாகப் பேசப்படுகின்றது. அவ்வாறிருந்த போதும் பெண்களுக்கு வழங்கப்படும் சுதந்திரம் என்பது தற்காலத்தில் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.

பெண் என்பதற்கு அப்பால் மனிதன் என்ற அடிப்படையில் மனித உரிமைப் பிரகடனத்தில் சொல்லப்பட்ட அனைத்து வகையான உரிமைகளையும் அனுபவிப்பதற்கு பெண் உரித்துடையவள் ஆவாள்.

இதனையே 1948 ஆம் ஆண்டு மனித உரிமை பிரகடனத்தின் முகவுரையில் 'மானிட குடும்பத்தைச் சேர்ந்த சகலரினதும் உள்ளார்ந்த கௌரவத்தினையும் சமமான உரிமைகளையும் அங்கீகரித்தல் உலகின் சுதந்திரம் சமாதானம் நீதி என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே உறுப்புரை 1-3 இல் சகல மக்களும் பாராபட்சமின்றி சகல உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உரித்துடையவராவார் எனவும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உணருவதற்குமான உரித்துடையவர்கள் எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று மனித உரிமைப் பிரகடனத்தில் உறுப்புரை 22, 27 ஆகியவைகளில் சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை தெளிவாக அறிந்து கொள்ளும் உரிமையும் கொண்டுள்ளனர்.

தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி பெற்ற மகளிர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் தற்கால மகளிர் அனைவரும் தமது சுதந்திரம் உரிமை என்பன பறிபோகாமல் காத்திட வேண்டும். மதங்களுக்கு அப்பால் மனிதம் என்ற ஒரு எண்ணத்தில் தமது உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும்.

சுதந்திரம் மீறும் போது அது வன்முறையாகவும் அடக்குமுறையாகவும் மாறக் கூடும். எனவே சிந்தித்து செயற்படல் காலத்தின் தேவையாகும்

இதனை அடிப்படையாக வைத்தே இவ்வருட மகளிர்தின தொனிப்பொருள் அமைந்துள்ளது. அதாவது 'பாலின சமத்துவம் மூலம் நிலையான நிலைபேறான நாளை' எனும் தொனிப்பொருளில் அமைந்துள்ளது.

பால் என்பது இயற்கையாக பிறப்பு அடிப்படையில் ஆண், பெண் என வேறுபடுவதாகும். இதேபோல் பால்நிலை என்பது சமூகத்தாலும் சமூகமயமாக்கல் செயற்பாடுகளாலும் பிரிக்கப்படுவதாகும்.

ஆனாலும் பால்நிலை சமத்துவம் என்பது இயற்கை பிறப்பிற்கு அப்பால் சமமானவர்கள் என்பதை சுட்டி நிற்கிறது. இந்த சமத்துவத்தையே இன்று பெண்கள் விரும்பி நிற்கின்றனர்.

சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தமது சாதனைப் பயணங்கள் மூலம் சமமானவர்களாக இருக்கின்றார்கள். இருப்பினும் வன்முறைகளும் துஷ்பிரயோகமும் இழிவுபடுத்தல்களும் அந்த நிலையிலேய இருப்பது பெண்களுக்கு வேதனை அழிக்கும் செயற்பாடாக இருக்கிறது.

இதற்கு காரணம் பெண் என்ற தன்மையே என்பது உறுதியாகும். சமூக வரையறைகள் கலாசார பாரம்பரியங்களை மீறாத வகையில் இன்று பல்வேறு துறைகளிலும் பெண்கள் கால்தடம் பதித்துள்ளனர்.

இவர்களின் சாதனைப் பயணம் உச்சம் தொட்ட அதவேளை உரிமை மீறல்களும் குறைந்தபாடில்லை. பெண்ணானவள் முழுமையான மனித உரிமையை அனுபவிக்கும் அளவிற்கு உரித்துடையவள் ஆவாள். எனவே பெண்களை மதித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு கரம் கொடுப்போம்.

பிரதிபண்ணப்பட்டது