உலக நாடுகளை சோகத்தில் உறைய வைத்துள்ள நிலையில் ஐதராபாத் இளைஞரை கரம் பிடித்த உக்ரைன் பெண்!

உக்ரைன் மீதான ரஷ்ய நாட்டின் படையெடுப்பு, உலக நாடுகளை சோகத்தில் உறைய வைத்துள்ள நிலையில், ஐதாராபத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உக்ரைன் பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தீவிரமாகி வருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. நாள்தோறும் ரஷ்யாவின் கொடூர தாக்குதலால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் பற்றி எரிவதும், ராணுவ வீரர்கள், அப்பாவி மக்கள் என தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பது தொடர்பாகவும் சோசியல் மீடியாவில் மனதை உருக்கும் விதமான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. உக்ரைன் போரால் மனமுடைந்த குடிமக்களின் கண்ணீரும், வெடிகுண்டு சத்தம் கேட்டு அஞ்சும் குழந்தைகளின் கதறலும் காற்றில் கலந்து காண்போரை இம்சித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் போரில் இருந்து தப்பி வந்த அந்நாட்டு பெண் ஒருவர் இந்திய இளைஞரை கரம் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உக்ரைனைச் சேர்ந்த லியுபோவ்விற்கும், அங்கு பணியாற்றி வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த பிரதீக் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதற்காக மணப்பெண், மணமகள் உள்ளிட்டோர் இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.
அதேநாளில் தான் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். மறுநாளே ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். இந்த இக்காட்டான சூழ்நிலையிலும் திருமண ஏற்பாடுகளை நிறுத்த விரும்பாத பிரதீக், லியுபோவ் இருவரும் இந்தியா புறப்பட்டு வந்தனர். ஐதராபாத்தில் இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற சில்குர் பாலாஜி கோவிலின் தலைமை அர்ச்சகர் சி.எஸ்.ரங்கராஜன் கலந்து கொண்டு தம்பதிகளை ஆசிர்வதித்துள்ளார்.
விரைவில் போர் முடிந்து அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்த, சி.எஸ்.ரங்கராஜன் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் பேரழிவிற்குள்ளான உலகிற்கு இந்த யுத்தம் இரத்தக்களரி மற்றும் கொந்தளிப்பை மட்டுமே கொண்டு வந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி குறித்து ஐதாராபாத் செய்தியாளர் ஒருவர் பதிவிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதோடு, வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
While #Ukraine is being torn by #RussianInvasion, here is a happy story. Lyubov fell in love with Hyderabadi Prateek &got married in Ukraine. They left to India for reception just before war. Chilkur Balaji chief priest Rangarajan blessed the couple &prayed for peace in #Ukraine pic.twitter.com/nDpuDYZ1t2
— Revathi (@revathitweets) March 1, 2022
உக்ரைனில் உருவாகி வரும் அவசர காலத்தில் கருத்தில் கொண்டு, இந்தியா தனது குடிமக்களை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாது, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அண்டை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ டெல்லி தயாராக இருப்பதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற போர் காலங்களில் குடிமக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது. மனிதாபிமான உதவியின் அடிப்படைக் கோட்பாடுகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம் என நேற்று நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



