வேண்டாம் இடியாப்பச் சிக்கல் உறவு. பெற்றோர் சம்மதமில்லா காதல் வெறுக்கத்தக்கதா? காதல் விதிகள். பாகம் -11

#Love #Article #Tamil People
வேண்டாம் இடியாப்பச் சிக்கல் உறவு. பெற்றோர் சம்மதமில்லா காதல் வெறுக்கத்தக்கதா? காதல் விதிகள். பாகம் -11

பெற்றோர் எல்லோரும் நல்லவரே.  ஆனால் ஒரு சிலர் மட்டும் காதல் என்ற பெயரைக் கேட்டல் மிருகமாகிவிடுவார்கள்.  அப்படிப்பட்டவர்கள் தம் பிள்ளையின் காதலை வெறுக்க எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமாக சொல்வது இனி எப்படி மற்றவர் முகத்தில் விழிக்கமுடியும் என்பதைத்தான்.

அதாவது, ‘உன் மகனோ திருமணத்துக்கு தானே துணையை தேடிக்கொள்ளும் வரையில் நீ என்ன செய்துகொண்டிருந்தாய்” ஏன் உன் பிள்ளை இப்படி செக்ஸ் தேடி அலைகிறது?’ என ஊரார் அவர் முன்னே கேட்பதாகவும், அவர் பதில் சொல்லமுடியாமல் அவமானப் படுவதாகவும் கற்பனை செய்துகொள்வார்கள்.
இதை எதிர்கொள்ள தயங்குவார்கள், இரண்டுவிதமான எல்லைக்குப் போவார்கள்.

ஒன்று, எப்பாடுபட்டாவது காதலைப் பிரிப்பது என்கிற அளவில் இறங்குவார்கள்.  ஒத்துவராத பட்சத்தில் கொலை செய்யகூடத் தயங்கமாட்டார்கள்.  அதாவது, காதலை எதிர்த்து செய்யப்படும் கௌரவக் கொலையால் குடும்ப மானம் காப்பாற்றப்பட்டதாக மடத்தனமாக நம்புவார்கள்.  இதற்கு ஜாதி, மதம், அந்தஸ்து என எதையாவது காரணம் காட்டுவார்கள்.  இவர்களுக்கு முன் கண்ணீர் செல்லுபடியாகாது.

இன்னொரு வகையினர் உண்டு,  காதல் என்ற வார்த்தையைக் கேட்டதும், ஏதோ பெரும் சோதனை வந்ததாக நினைத்துக் கலங்குவார்கள்.  எதையும் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள்.  கோபத்தைக் காட்டமாட்டார்கள்.  எதுவும் செய்யத் தெரியாமல், இறுதியில் அவர்களது வாழ்வையே தற்கொலையில் முடித்துக் கொள்வார்கள்.

இந்த இரண்டு வகையைச் சேர்ந்தவர்களும் இந்தச் சமூகத்தில் மிகமிகக் குறைவான சதவீதத்தில் தான் வாழ்கிறார்கள் என்றாலும், இவர்களின் செயல்களால் எழும் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்பதை மறுக்க இயலாது.

பெற்றோரின் இப்படிப்பட்ட குணத்தை ஏற்கெனவே தெரிந்திருக்கும் பிள்ளைகள், காதலில் இறங்காமல் இருப்பது மிக நல்லது,  ஏனென்றால், வாழ்வில் நிம்மதியாக, சந்தோஷமாக, வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றுதான் காதலில் இறங்குகிறோம்.  அதேசமயத்தில் அந்தக் காதலால் இரண்டு குடும்பத்தாரின் எதிர்காலமே தொலைந்துபோகும் என நினைத்தால், காதல் என்பதை மனத்துக்குள் போட்டு பூட்டி வைத்துக்கொள்வதே நல்லது.

பெற்றோர் குணம் அப்படியிருந்தால், சில பிள்ளைகள் அவர்களை விட தீவிரக் குணத்துடன் இருப்பார்கள்.  உங்களைவிட எனக்கு வீம்பு அதிகம்.  கண்டிப்பாக காதலிப்பேன் என இறங்கியவர்கள், திருமணம் செய்துகொள்ள ஏற்ற கட்டம் வரும்வரையிலும் காதலை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வது நலம்.  மீறி தெரிந்து ஏதாவது பிரச்சனைகள் வந்தால், எதிர்த்து நிற்பதற்கு அல்லது உடனே திருமணம் முடித்து தனியே வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்னும் சில பெற்றோர்கள் செண்டிமென்ட்களில் சிக்கியர்வர்களாக இருக்கிறார்கள்.  அதாவது திருமணம் என்பது நடந்தேறும் வரையே கோபம் என்பது இருக்கும்.  அவர்களை மீறி திருமணம் நடந்துவிட்டால், அப்படி ஒரு பிள்ளை எனக்குப் பிறக்கவேயில்லை என தைரியமாக தலை முழுகிவிடுவார்கள்.  அதனால் திடீர் திருமணம், அதற்குப் பின் வாழ்வு போன்ற விஷயங்களுக்காக பணம் என்பதும் அதற்கு உதவி செய்ய நபர்களும் மிக அவசியம்.

இப்படிப்பட்ட பெற்றோர் இரண்டு வீடுகளிலும் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால், யாராவது ஒரு பக்கம் ஆதரவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிக நல்லது.  அடிதடி, கொலை போன்றவை நடக்க வாய்ப்பிருந்தால், முதல் வேலையாக இருவரும் ஊரைவிட்டு தப்பித்து, ஒரு பாதுகாப்பான இடத்துக்குப் போக வேண்டியது அவசியம்.