செலவில்லாமல் நல்ல ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும் வழிகள்!

Nila
2 years ago
செலவில்லாமல் நல்ல ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும் வழிகள்!

நீங்கள் அழகு மற்றும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரா.! சரும பராமரிப்பு பொருட்களை வாங்குவதற்காக மாதந்தோறும் நீங்கள் அதிக செலவு செய்து கொண்டிருப்பவரா.! அழகு முக்கியம் என்றாலும் மாதந்தோறும் உங்கள் கணிசமான நிதியை காலி செய்கிறது அல்லவா.. ஆனால் அதிக பணம் செலவு செய்து சரும பராமரிப்பை தொடர்ந்து மேற்கொள்வது பலரால் தொடர்ந்து செய்ய முடியாமல் போகிறது. ஆனால் காசே செலவு செய்யாமல் உங்கள் கனவு சருமத்தை பெற பல வழிகள் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? புகழ்பெற்ற பிரபல தோல் மருத்துவரான டாக்டர் நிவேதிதா தாது, ஆரோக்கியமான தோல் தோற்றத்தை அடைய எளிய வழிகளை பற்றிய தகவல்களை ஷேர் செய்து இருக்கிறார்.

இது பற்றி கூறி இருக்கும் அவர் நமது சருமத்திற்கு கூடுதல் கவனம் மற்றும் ஹைட்ரேஷன் தேவை. ஆனால் சரும அழகை பெறுவது பணம் சம்பந்தப்பட்டது அல்ல என்று டாக்டர் நிவேதிதா தாது கூறுகிறார். நல்ல சருமத்தை பெற உதவும் ஆரோக்கியமான மற்றும் மலிவான சரும பராமரிப்பு நடைமுறைகளை இப்போது பார்க்கலாம்.
    
 சீரான இடைவெளியில் தலையணை உறையை மாற்றவும் :
சீரான இடைவெளியில் உங்கள் பெட்ஷீட் மற்றும் தலையணை உறையை மாற்றும் பழக்கம் உங்கள் சரும ஆரோக்கியத்தில் நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். நம் முகம் மற்றும் தலை முடியிலிருந்து எண்ணெய், பாக்டீரியா மற்றும் இறந்த சரும செல்கள் போன்ற அழுக்குகள் பெட்ஷீட்கள் மற்றும் தலையணை உறைகளில் படிகின்றன. தொடர்ந்து அழுக்கான அவற்றை பயன்படுத்தி கொண்டே இருப்பது முகத்தில் பாக்டீரியா பரவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறை தலையணை உறையை மாற்றுவது சிறந்தது.இப்பழக்கம் முகப்பரு ஆபத்தை தவிர்க்கவும் உதவும் என்கிறார் நிவேதிதா.
    
 முகத்தை அழுத்தி உறங்க வேண்டாம் : உங்களின் தூங்கும் பொசிஷன் கூட உங்கள் தோலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். நீங்கள் முகத்தை மெத்தையில் அழுத்தி படுத்து தூங்கும் பழக்கம் உடையவராக இருந்தால் அதை மாற்றி கொள்வது முகப்பரு மற்றும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது உள்ளிட்ட பாதிப்புகளை தவிர்க்க உதவும்.
    
 தவறாமல் உடற்பயிற்சி : நாம் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் வியர்வை வடிவில் வெளியேறுகின்றன. எனவே தினசரி உடற்பயிற்சி உடலில் ஊட்டச்சத்துக்கள் சீராக உருவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. சீரான உடற்பயிற்சி பழக்கம் நல்ல பளபளப்பான மற்றும் ஃபிரெஷ்ஷான சருமத்தை பெற உதவுகிறது.
    
 சரியான தூக்கம் : இரவில் சிறந்த தரமான தூக்கத்தை கொண்டிருப்பது நல்ல ஆரோக்கியமான சரும அழகை உறுதி செய்யும் சிறந்த வழிகளில் ஒன்று. நாம் தூங்கும் போது உடலின் முக்கிய உறுப்புகள் மற்றும் செல்கள் தங்களை தாங்களே பழுது பார்த்து கொள்கின்றன மற்றும் போதுமான வளர்ச்சியை பெறுகின்றன. ஆனால் புதுமண தூக்கம் இல்லாமல் இருப்பது கண்களை சுற்றி கருவளையம். சோர்வான தோற்றம், தோல் சுருக்கங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு காரணமாகின்றன. எனவே தினமும் குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்குவது மிகவும் அவசியம்.
    
மொபைல் ஸ்கிரீனை அடிக்கடி சுத்தம் செய்யவும் : டாய்லெட்டை விட நாம் பயன்படுத்தும் மொபைல் மிகவும் அழுக்காக இருக்கலாம் என்பது ஆய்வில் வெளிவந்த உண்மை. எனவே சுகாதாரமற்ற விஷயம் உங்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு உங்கள் மொபைல் ஸ்கிரீனை அடிக்கடி க்ளீன் செய்வதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். இப்பழக்கம் பருக்களிலிருந்தும் விடுபடவும், வெளிப்புற காரணி உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கவும் உதவும்.