நவீன உலகத்தை பெண்கள் வெற்றி கொண்டுள்ளனரா?

Prathees
2 years ago
நவீன உலகத்தை பெண்கள் வெற்றி கொண்டுள்ளனரா?

இந்த உலகம் பெண்களுக்குமானதா? என்பதனை பெண்களே சிந்திக்கும் வகையில் நகர்த்தப்பட்டிக் கொண்டிருக்கின்றது. நாம் வாழும் இந்த நாட்டில் குறுகிய வாழ்க்கைக் காலத்தில் எத்தனை அவலங்களை கண்டிருக்கின்றோம்.

அன்றாட வாழ்வில்  நாளிதழ்களின் பக்கங்களில் பாலியல் துன்புறுத்தல்கள், தீண்டல்கள், வன்முறைகள் என்று ஏதேனும் ஒரு செய்தி இல்லாமல் நாள் கடந்துவிடாதா? என்ற ஏக்கம் என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கும் என நினைக்கின்றேன்.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சிறுமியின் பாலியல் துஷ்பிரயோகமும், கொலையும் என்னையும் பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது. இன்றைய நிலையில் பண்பாட்டு விழுமயங்களில் நாம் பேணிவந்த உறவுகளெல்லாம் உடைத் தெறியப்பட்டுள்ளன. பூமியில் புதிதாக பிறக்கும் பிஞ்சுகள் இனியாரை நம்பிப்பிறக்கும்.

பெற்றவர்களையா? சகோதரர்களையா? உறவினர்களையா? நிகழ்ந்த இச் சம்பவத்துக்காய் ஒட்டிமொத்த சமுதாயத்தையும் சாடுவது முறையன்று. ஆனால் இவ்வாறான எண்ணம் தோன்றுவது பெண்பிள்ளைகளைப் பெற்ற தாய்மாருக்கு இயல்புதான்.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை பரவலாக நடந்து கொண்டிருக்கின்றது. நமது கண்ணுக்கும் காதுக்கும் வருவதனை தவிர ஏராளமாய் உண்டு.

இது ஒரு சந்தையாக மாற்றமடைகின்றதா? போகப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றார்களா? இவற்றின் பின்னணி என்ன? உளவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டியவை. பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை என்பது மனித உரிமை மீறல்களுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியவை. அதிகரித்து வரும் நிகழ்வுகள் மற்றும் பரவலான பாதிப்புகள் இதன் அவசியத்தை மேலும் மேலும்  வலியுறுத்துகின்றன.

இலங்கையில் தற்போதைய நிலையில் வன்முறைகளுக்கான தீர்வுகளை வழங்க நீதித்துறை செயற்பாடுகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.தற்போதைய வாழ்வியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அனுபவங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற நடவடிக்கைகள் கொண்டுவரப்பட வேண்டும். நெருக்கமானவர்களே தவறான தொடுதல்களில் ஈடுபடும்போது குழந்தைகள் எங்கே சென்று முறையிடுவார்கள்? தனக்கு இப்படியொன்று நிகழ்ந்திருக்கின்றது என்பதனையே அந்த பிஞ்சுகள் காலம் கடந்துதான் உணருகின்றனர்.

பெண் தற்காப்புப் படிநிலைகள் பலதளங்களில் உருவாக்கப்பட வேண்டும். கல்வி நிலையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். பாலியல் கல்வியை மறுக்கின்றவர்களுக்கு அதன் தேவை இன்னும் புரியாதது ஆச்சரியமானது. பெண்ணியம், சாதனை என்று  பேசிக்கொண்டு நாங்கள் வளர்ந்து விட்டோம் என்று பெண்கள் நம்பிக்கொண்டிக்க இன்னுமொரு வகையில் நாம் நசுக்கப்படுகின்றோம்.

இவர்கள் கடந்து வந்த பாதையில் சொல்லமறந்த அல்லது மறைத்து வைத்த பாலியல் தீண்டல்களும், துஷ்பிரயோகங்களும் அதிகமிருக்கும். தவறுகளுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட  வேண்டும்.

 

பிரதிபண்ணப்பட்டது.