இன்றைய வேத வசனம் 25.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ஒரு வயதான அம்மையாருக்கு 75 வயதிருக்கும். தனது வீட்டிலிருந்து இரண்டு மயில் தொலைவில் இருந்த ஒரு மலைப்பகுதியில் அவர்கள் ஒரு ஞாயிறு பள்ளியை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலையிலிருந்தே கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது. காற்றும் பலமாக வீசியது!
இன்றைக்குப் போகாமல் இருந்தால் என்ன என்று முதலில் நினைத்த அவர்கள் "இல்லை, போய்த்தான் ஆக வேண்டும். யாராவது ஒருவர் அங்கே எனக்காகக் காத்திருக்கலாம் அல்லவா?" என்று தீர்மானித்தார்கள்.
தண்ணீரில் நனையாத அங்கியை அணிந்துகொண்டு, காலில் உயரமான பூட்ஸ் அணிந்து, கையில் குடையை எடுத்துக்கொண்டு அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.
மழையையும் புயலையும் கடந்து, அந்த ஞாயிறு பள்ளியைச் சென்றடைந்தார்கள்.
அங்கே ஒரேயொரு இளைஞன் மட்டுமே காத்திருந்தான். அவர்கள் சோர்வடையவில்லை. தன்னால் முடிந்த வரையில் அவனுக்கு வேதாகமப் பாடங்களைப் போதித்தார்கள்.
அதற்குப் பிறகு அந்த இளைஞனை அவர்கள் பார்க்கவில்லை. அந்த ஞாயிறு பள்ளி முயற்சி ஒரு தோல்வியோ என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகியது.
அந்த இளைஞன் அந்த வாரமே இராணுவத்தில் சேர்ந்து விட்டிருந்தான். ஒன்றரை ஆண்டுகள் கழித்து அந்தப் போர்வீரனிடமிருந்து அந்த வயதான அம்மையாருக்கு ஒரு கடிதம் வந்தது.
அன்று புயலின் மத்தியில் அவர்கள் ஞாயிறு பள்ளிக்கு வந்ததற்காக அவன் அவர்களுக்கு நன்றி கூறியிருந்தான்.
"இன்று புயலும் மழையுமாக இருக்கிறதே? அந்த வயதான அம்மையார் உண்மையாக ஊழியம் செய்தால் எப்படியும் வந்துவிடுவார்களா பார்ப்போம்" என்று நினைத்துதான் நான் அந்தப் பள்ளிக்கு வந்ததாக அவன் கடிதத்தில் எழுதியிருந்தான்.
ஆனால் அவர்களோ பள்ளிக்கு வந்தது மட்டுமல்லாமல், அவன் மட்டுமே இருந்தாலும் முழுப் பள்ளிக்கும் போதிப்பது போல அவனுக்கு வேதாகமப் பாடங்களைப் போதித்திருக்கிறார்கள்.
இது அவனுடைய இருதயத்தைத் தொட்டது தேவன் அந்த வேளையில் அவனைக் கிறிஸ்துவுக்காக ஆயத்தப்படுத்தப் பயன்படுத்தினார்.
இப்போது போரில் காயப்பட்டு, மருத்துவமனையில் கிடந்த அவன் அவர்களுக்கு எழுதிய இந்தக் கடிதத்தில் அவர்களை நிச்சயமாகப் பரலோகத்தில் சந்திப்பதாக தெரிவித்திருந்தான்.
கடுமையான புயல் அடித்தாலும், ஒரே ஒரு மாணவன் மட்டுமே இருந்தாலும் அந்த வயதான அம்மையார் சோர்ந்துபோகாமல் இருந்தது மகிமையான காரியம் அல்லவா?
ஒருவரே வந்தாலும் அவருக்காக ஊழியம் செய்ய ஆயத்தமாக இருங்கள்... ஆமென்!
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. (கொரிந்தியர் 15:58)



