இன்றைய வேத வசனம் 29.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 29.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

விட்டுக் கொடுப்பது வீரனுக்கு அழகு என்ற பழமொழியை கேட்டதுண்டு. விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை. எனவே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் பலரை சொல்லி வளர்ப்பார்கள்.
ஆனால் என்ன விட்டு கொடுக்க வேண்டும், என்ன விட்டுக் கொடுக்க கூடாது என்பது இன்றைய வாலிபர்களின் குழப்பம்.

தங்களுடைய வாழ்க்கையில் ஆசை கனவுகளோடு பள்ளி செல்லும் மாணவரும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்லூரி செல்லும் இளைஞரும், உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு அலுவலகத்திற்கு செல்லும் பட்டதாரிகளும் எதை நாம் விட்டுக் கொடுக்க வேண்டும், எதை நாம் விட்டுக் கொடுக்க கூடாது என்ற காரியத்தை மனதில் வைக்க வேண்டும்.

அநேக நேரம் வாலிபர்கள் இந்த காரியத்தை தலைகீழாக செய்வது அவர்களின் கனவுகளையும், இலட்சியங்களையும் களைத்து விடுகிறது.

தாங்கள் படிக்கும் போது கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும்; ஆனால் மற்ற தேவையில்லாத காரியங்களில் கவனம் சிதறுவதால், தங்கள் இலக்கையே விட்டுக் கொடுக்கிறார்கள்.

கல்லூரிப் படிப்பில் தங்களுக்கு தேவையான தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ளாமல் நேரங்களையும், காலங்களையும், காதல், மோகம், போதை போன்ற அருவருக்கத்தக்க காரியங்களில் தங்களை ஈடுபடுத்தி, தங்கள் உயர்வை விட்டுக் கொடுக்கிறார்கள்.

உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர், அவர்கள் மேலும் உயர வேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும், ஜாலியாக இருக்க வேண்டும் என்று எண்ணி பல தவறான வழியில் செல்ல ஆரம்பித்து, அனேகர் வேலையில் உண்மையில்லாதவர்களாய் இருக்கிறார்கள்.

அடுத்தவர்கள் மீது வீணாக கோபம், எரிச்சல், பொறாமை மேலும் தனக்கு தகுதி இல்லாத தவறான உறவு போன்ற காரியத்திற்கு இடம் கொடுத்து தங்கள் உயர்ந்த இலட்சியங்களை விட்டுக் கொடுக்கிறார்கள்.
யோசேப்பு தனக்கு முன்பாக பல இச்சையான காரியத்தை சாத்தான் வீசினாலும் பரிசுத்தத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

தானியேல் தனக்கு ராஜ போஜனமே கிடைத்தபோதும், தன் சரீரத்தை தீட்டுப்படுத்த விட்டுக் கொடுக்கவில்லை.

இன்றைய சூழலில் உண்மையில், ஒழுக்கத்தில், பண்பில் அநேக நேரம் விட்டுக் கொடுத்து விடுகிறோம்.
அதேநேரம் பிறரை மன்னிப்பதே அன்பு செலுத்துவது போன்ற காரியங்களில் விட்டுக்கொடுப்பதில்லை.
எனவே, நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய காரியங்களையும், விட்டுக் கொடுக்கக்கூடாத காரியங்களையும் நன்கு அறிந்து செயல்படும் போது, நீங்கள் தேவன் விரும்பும் வாலிபனாய் எழும்ப முடியும்! ஆமென்.

நீதிமொழிகள் 23:15
என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.