சுவாமி ஐயப்பன் நட்சத்திரம் யாது தெரியுமா?

#spiritual #God
சுவாமி ஐயப்பன் நட்சத்திரம் யாது தெரியுமா?

சுவாமி ஐயப்பன், மார்கழி மாதம் பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரம், சனிக்கிழமை, விருச்சிக லக்னத்தில் அவதரித்தார். நான்கு யுகங்களிலும் ஹரிஹர புத்திரனான சுவாமி ஐயப்பன், Ôஆதிதர்ம சாஸ்தாவின் அம்சம்Õ என்றும், அவர் எட்டு அவதாரங்கள் எடுத்திருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த எட்டு அவதாரங்களும் நான்கு யுகங்களில் ஒவ்வொரு காலக்கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அவதாரத்திரு உருவை மிகவும் பழமையான கோயில்களில் தரிசிக்கலாம்.அவர் எடுத்த அவதாரங்களில் ஒன்று கல்யாண வரத சாஸ்தா. இவர், பிரம்மனின் புதல்விகளான பூரணை, புஷ்கலை இருவரையும் மணம் புரிந் ததாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகே, இவர், சுவாமி ஐயப்பனாக அவதரித்து பிரம்மச்சரியம் கடைப்பிடித்து அதர்மமே உருவான மகிஷியை அழித்தார். இதுவே சாஸ்தாவின் கடைசி அவதாரம் என்பர்.ஆதிசாஸ்தாவை பூதநாதர் என்றும் வழங்குவர். அவரது எட்டு அவதாரங்களும் மகிமை வாய்ந்தவை.

சம்மோஹன சாஸ்தா: நமது வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வமான இவர், இல்லறத்தில் ஒற்றுமையை மலரச் செய்பவர். பூரணை-புஷ்கலை தேவியருடன் காட்சி தருவார்.

கல்யாண வரத சாஸ்தா: கோயில்கள் சிலவற்றில் தன் தேவியருடன் காட்சி தரும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் செவ்வாய் தோஷம் மற்றும் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.

வேதசாஸ்தா: இவர், சிம்மத்தின் மீது தேவியருடன் அமர்ந்திருப்பார். வேதத்தை தழைக்கச் செய்பவர். சாஸ்திர அறிவை அருள்வதுடன், அதன்படி நம்மை வழி நடத்தவும் செய்யும் தெய்வ சொரூபம். கல்வி, கேள்வி ஞானத்தில் சிறக்க, இவரை வழிபட வேண்டும். இவர் மூலம் குருவின் திருவருள் கிட்டும்.

ஞான சாஸ்தா: தட்சிணாமூர்த்தியைப் போன்று கையில் வீணை ஏந்தி, சீடர்கள் அருகில் இருக்க, கல்லால மரத்தின் கீழ் குரு பீடத்தில் அமர்ந்து, கல்வி அறிவை வழங்கும் கோலத்தில் காட்சி தருபவர். இவரை வழிபட்டால் பேச்சுத் திறன் அதிகரிக்கும்.

பிரம்ம சாஸ்தா: தன் பத்தினியர் இருவருடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருபவர். மலட்டுத்தன்மை நீங்க, குழந்தைச் செல்வம் பெற இந்த பிரம்ம சாஸ்தாவை வழிபடுவார்கள்.

மகா சாஸ்தா: இவர், நான்கு திருக்கரங்களுடன் யானை மீது அமர்ந்து காட்சி தருவார். ராகு கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை நீக்கி அருளும் இந்த மூர்த்தியை வழிபட்டால், வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம்.

வீரசாஸ்தா: இவர் ருத்ர மூர்த்தியாக திகழ்பவர். ஆயுதம் ஏந்திய நான்கு திருக்கரங்களுடன், குதிரை மீது அமர்ந்து, தீயவர்களை அழிக்கும் கோலத் தில் காட்சி தருவார். இவரை வணங்கினால், கேதுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

ஸ்ரீதர்ம சாஸ்தா: இவரே சபரி மலையில் குக்குட ஆசனத்தில் அமர்ந்து சுவாமி ஐயப்பனாக அருள்புரிகிறார். கலியுக தெய்வமான இந்த சுவாமி ஐயப்பனை, வழிபட, சகலவிதமான துன்பங்களும் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசும்.

பரசுராமர், கேரள பூமியில் மொத்தம் 108 இடங்களில் திருக்கோயில் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. அவற்றுள் 18 கோயில்களில் சுவாமி ஐயப்பன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். சபரி மலையில் சுவாமி ஐயப்பன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தவரும் பரசுராமரே. சுவாமி ஐயப்பன் பூலோகத்தில் தனது அவதார நோக்கம் முடிவடைந்ததும் (பன்னிரண்டாம் வயதில்) இந்த விக்கிரகத்தில்தான் ஐக்கியமானார் என்பது புராணம் கூறும் தகவல். கிராமப்புறங்களில் ஐயனார் எனப்படும் சாஸ்தா வழிபாடு அதிகம். திருச்சி-பெரம்பலூருக்கு இடையே உள்ள திருத்தலம் திருப்பட்டூர். இங்கு கோயில் கொண்டுள்ள மகாசாஸ்தா, கையில் 'திருஉலா ஏடு' ஏந்தியபடி காட்சி தருகிறார்.

இவரை அரங்கேற்றிய ஐயனார் என்பர். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள ஊர் 'ஆஸ்ரமம்.' இங்கு அருள்புரியும் சாஸ்தாவின் திருநாமம் 'அஞ்சனம் எழுதிய கண்டன்'. கழுத்தில் பதக்கம், நெற்றியில் விபூதிப் பட்டையுடன் திகழும் இவர், ஒரு காலை மடக்கி வைத்து அமர்ந்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு சாஸ்தாவை வேண்டி 'அத்திரி முனிவர்' யாகம் செய்ததாகக் கூறுவர்.முருகப் பெருமானுக்கு அறுபடை வீடு உண்டு. அவரது அண்ணன் விநாயகருக்கும் அறுபடை வீடு உண்டு. அதேபோல் சுவாமி ஐயப்பனுக்கும் அறுபடை வீடு உண்டு. அவை: அச்சன்கோயில், ஆரியன்காவு, குளத்துப்புழை, எருமேலி, பந்தளம், சபரிமலை.

அச்சன்கோயில்: தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள அம்பலத்தில் (கோயில்) தர்மசாஸ்தா, வன அரசனாகக் காட்சி தருகிறார். பரசுராமரால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விக்கிரகம் இமயமலை அடிவாரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்த மலை வாளும் ஏந்தி, பூரணை-புஷ்கலை தேவியருடன் அருள்புரிகிறார்.

ஆரியன்காவு: தமிழகத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் எல்லையாக அமைந்துள்ள தென்மலையின் பக்கத்தில் உள்ள செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலத்தில் அமைந்த திருத்தலம். ஆரியன்-உயர்ந்தவன், காவு-சோலை. உயர்ந்தவரான சாஸ்தா கோயில் கொண்டுள்ள சோலை என்று இத்தலத்திற்குப் பெயர். இத்திருக் கோயிலில் ராஷ்டிர குலதேவி புஷ்கலையுடன் அரசனாகக் காட்சி தருகிறார்.

குளத்துப்புழை: செங்கோட்டையிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் கேரளாவில் அமைந்துள்ளது. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இப்பகு தியில் வாழும் மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குமுன், பால சாஸ்தாவின் அம்பலம் சென்று, அங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்து, எழுத்தறிவித்து, பிறகு பள்ளிக்கு அனுப்புவர்.

எருமேலி: சபரிமலையின் ஏழு கோட்டைகளுள் இது முதல் கோட்டையாகும். இங்கு வாவர் பள்ளி வாசல், கோட்டை கருப்பசாமி கோயில்கள் உள்ளன. இங்குதான் மணிகண்டன் எருமை முகத்துடன் அட்டூழியம் செய்துகொண்டிருந்த மகிஷியின் மேல் ஏறி நின்று அவளை வதம் செய்தார். கைகளில் வில், அம்பு ஏந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

பந்தளம்: இத்தலத்தில் உள்ள மணிகண்டன் அம்பலத்தில் ஐயப்பன் பாலகனாக நின்ற நிலையில் அருள்கிறார். சபரிமலை சந்நிதானத்துக்குச் செல்லும் வழியில் உள்ள இத்தலத்தில் அருகில் ஓடிக்கொண்டிருக்கும் பம்பை நதிக்கு அருகில்தான் ஐயப்பன் குழந்தையாக, பந்தள ராஜாவால் கண்டெ டுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். இங்குதான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் பாதுகாப்பாக உள்ளன.

சபரிமலை: கேரளாவில் சபரிமலையில் அருள்புரியும் சுவாமி ஐயப்பன் அமர்ந்தத் திருக் கோலத்தில், இரண்டு குதிகால்களின் மீது உடலின் அடிப்பாகத்தை அழுத்தி முன்புறம் சாய்ந்த நிலையில் தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு யோக சின்னம், சின்முத்திரை தாங்கி அருள்புரிகிறார். இந்த விக்கிரகத்தில்தான் பன்னிரண்டு வயதான மணிகண்டன், தான் பூலோகத்திற்கு வந்த வேலை முடிந்துவிட்டதாக தன்னை வளர்த்தவர்களிடம் சொல்லிவிட்டு, கலியுகத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்க, 'பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத்தில் இரண்டறக் கலந்தார்' என்று புராணம் கூறுகிறது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு