காலம் சீராய் இருப்பதில்லை...

அது ஒரு காலத்தில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த நதி.
அதன் போக்கில் ஓடிந்திரிந்த படகுகள் பல.
சலனமில்லா நீர்த் திரட்சி.
அதன் நீர்த் தரையில் பிறந்து
வளர்ந்து நீந்திக் கரை வளர்த்தோர்
பல்லாயிரம் பேர்.
வெயிலின் சூட்டையும்
மழையின் சாரலையும் தனக்குள் புதைத்துவிட்டு
எமை இதமாய்க் கரைசேர்க்கும்.
அந்த நதி என்றுமே சீற்றங்கொண்டதில்லை.
எமை எல்லாமாய் வளர்த்த நதி
எங்கள் உயிராய் வளர்ந்தது.
காலம் சீராய் இருப்பதில்லையே
இப்போ பறவைகளில்லை.
அங்கொன்றாய் அலைந்து திரிந்து
கால் நனைத்த மனிதர்களில்லை.
கரைக்கொன்றாய் சிதைந்து காணாமல் போயின படகுகள்.
நதியின் உயிரைச்சுற்றி
தனிமை காடாய் அமர்ந்தது.
அகோர எச்சங்களால் நதி
மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது.
நதியின் கரையைச்சுற்றி
ஓர் அழிப்புத்தாண்டவம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது
எங்கும் இருள்.
ஆனாலும்
வரலாற்றில் தன்மீது படர்ந்து வளர்ந்த கால்களின் வருடலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது நதி
அழுக்கடைந்துபோன சிறகுகளை அசைத்து
இன்னும் ஓடத்துடித்துக்கொண்டிருக்கிறது



