இன்று ஆசிரியர் தினம் – கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று(06) புதன்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆசிரியர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையிலேயே அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு இவ்வாறு கொழும்பில் போராட்டம் நடத்த அவர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.
இரண்டு பிரதான விடயங்களை முன்னிலைப்படுத்தியே, இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் ஆகிய இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
தமது போராட்டத்திற்கு 86 நாட்கள் கடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமாயின், ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.



