இன்று உலக தேங்காய் தினம்

இன்று உலக தேங்காய் தினம்

செப்டம்பர் 2 – உலக தேங்காய் தினம். தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான்.

தேங்காய்

தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயைப்போக்கும். தேள், நட்டுவாக்கலி கொட்டினால் அதன் விஷம், கடுப்பு நீங்கவும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் `சைந்தவலாவனம்’ என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.

இளநீர்

குளிர்ச்சியைத் தரவல்லது. தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்சனை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அம்னியோட்டிக் திரவ (Amniotic fluid) குறைபாட்டை, தொடர்ந்து இளநீர்  அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது.

தேங்காய்ப் பூ

தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.

தேங்காய்ப்பால்

பசும்பாலுக்கு நிகரான குணம் உடையது. ஆண்மையைப் பெருக்க வல்லது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். வாதத்தைத் குறைத்து, கபத்தைக் கூட்டும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் கூட்டும். இது, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் சேச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால், மிகவும் ஆபத்தானது என்று ஒதுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், இதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை  நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. தற்போது வெளியாகும் ஆராய்ச்சிகளில், தேங்காய் எண்ணெய் நல்ல சமையல் எண்ணெய் எனக் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவில் இதயநோய் குறைவாக உள்ள மாநிலம் கேரளா என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், அங்கு சமையலில் பிரதானமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவதுதான்.

தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடியில் பாக்டீரியா கிருமி வளர்ச்சியைத் தடுக்கிறது.