21,125 அடி உயரத்தில்.. உறை பனியில்.. திருமணம் செய்து கொண்ட பொலிவியன் காதல் ஜோடி!

பொலிவியாவில் காதல் ஜோடி ஒன்று 21 ஆயிரத்து 125 அடி உயரத்தில் அமைந்துள்ள இல்லிமனி மலை உச்சியில் வித்தியாசமாக திருமணத்தை நடத்தியுள்ளனர்.
ஒவ்வொருவருக்குமே தங்களது வாழ்வில் மறக்க முடியாத நாள் அவர்களது திருமண நாள் தான். எனவே அந்த நாளை மேலும் சிறப்பாக்க, ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைப்பார்கள். சிலர் பறக்கும் விமானத்தில், பராசூட்டில், கடலுக்கடியில் என திருமணத்தை நடத்துவதும் வழக்கம்.
அந்தவகையில், பொலிவியாவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, தங்களது திருமணத்தை புதுமையாக பனி மலை உச்சியில் நடத்தி அசத்தியுள்ளனர்.
இல்லிமனி மலை
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் தலைநகர் லா பாஸ். அதன் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது இல்லிமனி பனி மலை. அந்நாட்டின் மிக உயரமான அந்த பனி மலையில் தங்களது திருமணத்தை நடத்த திட்டமிட்டது ஜானி பேக்சோ மற்றும் ஜெய்டி பாகோ காதல் ஜோடி.
மலை உச்சியில் திருமணம்
இதற்காக பனி மலையில் சுமார் மூன்று நாட்கள் நடந்து, அவர்கள் அதன் உச்சியை அடைந்தனர். கடினமான பயணம் என்பதால், அதிகம் கூட்டத்தைக் கூட்டாமல் முக்கியமானவர்களை மட்டும் அழைத்துக் கொண்டு அந்த ஜோடி, கடல் மட்டத்தில் இருந்து 21 ஆயிரத்து 125 அடி உயரத்தில் அமைந்துள்ள இல்லிமனி மலை உச்சியை அடைந்தனர். பின்னர் அங்கு வைத்து எளிமையாக தங்களது திருமணத்தை நடத்தினர்.
வாடிக்கை தான்
ஆரம்பத்தில் இது எந்தளவிற்கு சாத்தியம் என யோசித்த போதும், பின்னர் அதற்கான வேலைகளை உடனே ஆரம்பித்து விட்டதாக அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஜான் கூறியுள்ளார். கூடவே இது போன்ற புதுமையான முயற்சிகளை மேற்கொள்வது அவர்களுக்கு புதிதில்லையாம். ஏற்கனவே தனது காதலை ஜெய்டியிடம் இதே போன்று லா பாஸ்-ல் உள்ள மலைச் சிகரத்தில் வைத்து தான் ஜான் வெளிப்படுத்தி இருக்கிறார்.
குவியும் வாழ்த்துக்கள்
நினைத்தபடியே இல்லிமனி மலை உச்சியில் தங்கள் திருமணம் நடைபெற்ற தருணம் மிகவும் மகிழ்ச்சியானது என்று சமூகவலைதளப் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது அந்த புதுமணத் தம்பதி. புதுமையாக சிந்தித்து வித்தியாசமான இடத்தில் திருமணம் செய்து கொண்டதாக ஜான் - ஹெய்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த பனி மலை திருமண புகைப்படங்களும் வைரலாகி இருக்கிறது.



