‘அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும் சிறிய உயிரினம்‘ - கொசுக்கள் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்

Keerthi
2 years ago
‘அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும் சிறிய உயிரினம்‘ - கொசுக்கள் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்

உலக கொசு ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 20-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கொசுக்களிடம் இருந்தும், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களிடமிருந்தும் நம்மை பாதுகாப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினமாக இது கடைபிடிக்கப்படுகிறது.

டைனோசர் காலத்திலிருந்து உயிர்குடிக்கும் கொசு:

மிகச்சிறிய உயிரினமாக நாம் கருதும் இந்த கொசுக்கள்தான், இதுவரை உலக வரலாற்றில் அதிக உயிர்களை கொன்ற உயிரினமாக இருக்கும். டைனோசர் காலம் தொட்டு 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் கொசுக்கள் உருவாக்கும் மலேரியா, யானைக்கால் நோய், டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட பல நோய்களால் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் இறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் மக்கள் கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். image

1897-ஆம் ஆண்டு ஆகஸ்டு 20-ஆம் தேதி சர் ரொனால்டு ராஸ் என்ற இங்கிலாந்து மருத்துவர், அனாபிலஸ் என்ற பெண் கொசுவினால்தான் மனிதர்களுக்கு மலேரியா நோய் பரவுகிறது என்பதை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நாளைத்தான் உலக கொசு ஒழிப்பு தினமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.

கொசுக்கள் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்:

ஆண் கொசுக்கள் சைவ வகையை சேர்ந்தவை, இவை தாவரங்களின் சாறுகளை உறிஞ்சி வாழ்கின்றன. பெண் கொசுக்கள் தான் மனிதர்களிடமிருந்தும், பிற உயிரினங்களிலிருந்தும் ரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன. பெண் கொசுக்கள், தங்களது முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே மனிதர்களிடம் ரத்தம் குடிக்கின்றன.

ஆண் கொசுக்கள் ஒரு வாரமே உயிர் வாழக்கூடியன. பெண் கொசுக்கள் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை உயிருடன் இருக்கும். பெண் கொசுக்கள் ஒரு சமயத்தில் 100 முட்டைகளை இடுகின்றன. இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது என்பது ஆச்சர்யமான தகவல். இதனால்தான் கொசுக்கள் வேகவேகமாக பல்கி பெருகுகின்றன.

மூன்றுவகை கொசுக்கள் மிக ஆபத்தானது:

மொத்தமுள்ள 3,500 கொசு வகைகளில் மூன்று முக்கியமான, ஆபத்தான கொசுக்கள் என்றால், அவை க்யூலெக்ஸ், அனாபிலஸ், ஏடிஸ் ஆகியவை தான். ஏனெனில், இந்த கொசுக்கள்தான் அதிகளவில் நோய்களை பரப்பும் தன்மை கொண்டது.  க்யூலெக்ஸ் வகை கொசுக்கள் யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றை பரப்புகின்றன. அனாபிலஸ் வகை கொசுக்கள் மலேரியா காய்ச்சலை பரப்புகின்றன. ஏடிஸ் வகை கொசுக்கள் தான் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றை பரப்புகின்றன.

மீண்டும் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொசுக்கள்:

உலகில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து என்றால் அது கொசுவுக்கானதாகவே இருக்கும். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்து கொசுக்களை கொல்வதற்கு பல பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தியும்கூட, அந்த ரசாயனங்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொசுக்கள் பல்கிப்பெருகியே வருகின்றன.

கொசுக்களை ஒழிக்க நாம் பயன்படுத்தும் கொசுவத்தி சுருள், திரவ மருந்து போன்ற எதையுமே இப்போது கொசுக்கள் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.  கொசுவைக் கொல்லும் மருந்துகள் என நாம் பயன்படுத்தும் அவற்றால்கூட பலநேரங்களில் கொசுக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்ற பேச்சும் இருக்கிறது.

கொசுக்களை கட்டுப்படுத்தும் வழி:

இப்போது பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக நீர்நிலை அடைப்பு மற்றும் தேக்கங்கள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள் ஆகியவை அதிகரித்துவிட்டன. இதன்காரணமாகவே கிராமம், நகரம் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் நீக்கமற கொசுக்கள் நிறைந்துள்ளன. மேலும், நீர் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், டயர்கள், திறந்த கிணறு, திறந்து வைக்கப்படும் சிமெண்டு தொட்டிகள், குப்பைத்தொட்டிகள் போன்றவையும் கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தருகின்றன.

கொசுக்கள் தற்போது பல்கிப்பெருகுவதற்கு மற்ற பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதாவது தற்போது அதிகளவில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் தவளைகள் மற்றும் தட்டான்கள் பெருமளவில் அழிந்துவிட்டன. தவளைகள் மற்றும் தட்டான்களுக்கு கொசுக்களின் முட்டைதான் உணவு. இந்த உரியினங்கள் அழிந்து வருவதால் உணவுச்சங்கிலி பாதிக்கப்பட்டு கொசுக்கள் வேகவேகமாக பல்கிப்பெருகுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொசு ஒழிப்புக்காக மட்டுமே உலகம் முழுவதும் அரசுகள் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்கின்றன. அரசுகள் பொது இடங்களில் உள்ள நீர்நிலைகள், கழிவுநீர் தேங்கா வண்ணம் செயலாற்ற வேண்டும். மக்களும் விழிப்புணர்வுடன் வீட்டினையும், சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருந்தால் கொசுக்களை முற்றிலுமாக ஒழிக்கவில்லை என்றாலும் ஓரளவு கட்டுக்குள் வைக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.