இரணைமடுக் குளத்தின் வரலாறு என்ன.... எப்படி உருவானது நீர்த்தேக்கம்...?

Nila
3 years ago
இரணைமடுக் குளத்தின் வரலாறு என்ன.... எப்படி உருவானது நீர்த்தேக்கம்...?

இரணைமடுக் குளம் வடக்கின் வாழ்வாதாரம் கிளிநொச்சி மக்களின் நீரூற்று. தமிழ் மக்களின் பொருளாதார இருப்பு. அந்த வகையில் வடக்கின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடுக் குளம் காணப்படுகிறது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாய்ந்து வந்த கனகராயன் ஆற்று நீரை கடலோடு சென்று கலந்து வீணாகுவதை தடுத்து இரண்டு குன்றுகளை இணைத்து அணைகட்டு ஒன்றை அமைத்ததன் மூலம் உருவானதே இரணைமடு நீர்த்தேக்கம்.

இது இவ்வாறு இருக்க இரணைமடு படுகை என்பது வரலாற்று புகழ் மிக்க தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை உடைய தொல்பொருள் மையங்கள் இந்தப் பிரதேசத்தில் காணப்படுவதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரித்தானிய அதிகாரியான சேர் ஹென்றி பாட் 1855ம் ஆண்டு இரணைமடு நீர்த்தேக்கத்தை உருவாக்கும் கருத்தை முன்மொழிந்தார். 1866ம் ஆண்டு பிரித்தானிய நீர்ப்பாசன பொறியியலாளரும் தொல்பொருள் ஆய்வாளருமான ஹென்றி பார்க்காட் என்பவர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கான திட்டத்தை வரைந்தார். அக்காலத்திலேயே சுமார் இருபதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என அவரால் திட்டமிட்டுள்ளது.

இரணைமடு கட்டுமான பணிகளில் முன்னின்று உழைத்த பிரௌன் என்பவர் இரணைமடு கட்டுமானத்திற்கு மனிதவலு அவசியமானது என கருதி இரணைமடு குளத்தில் இருந்து கிளிநொச்சி குளத்திற்கு நீரை கொண்டு செல்லும் ரை ஆறு எனும் கால்வாய் மற்றும் குளச் சுற்றாடலில் குடியிருப்பு ஒன்றை உருவாக்கினார். 1900-1902 காலப்பகுதி வரை இந்த அடிப்படை செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

1920ம் ஆண்டு ஆகின்ற பொழுது பத்தொன்பது இலட்சத்து நான்காயிரம் ரூபாய் செலவில் இரணைமடு குளத்தின் முதற்கட்ட வேலை முழுமையாக்கப்பட்டது. அப்பொழுது இரணைமடுக் குளத்தின் நீர்க் கொள்ளளவு 44000 ஏக்கர் குளத்தின் ஆழம் 22 அடி.

குளத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் 1954ல் மேற்கொள்ளப்பட்டது அதன் போது நீரேந்து பிரதேசம் 82000 ஏக்கர் ஆகவும் நீர்மட்ட ஆழம் 30 அடி ஆகவும் உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து அதன் மூன்றாம் கட்டப் பணிகள் 1975,1977ம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது நீரேந்து பிரதேசம் 165000 ஏக்கர் ஆகவும் நீர்மட்ட ஆழம் 34அடி ஆகவும் விஸ்தரிக்கப்பட்டது.

இப்போது 227 சதுர மைல்கள் சுற்றளவு கொண்ட நீரேந்து பிரதேசத்தை கொண்டதாக இரணைமடு குளம் விரிவடைந்துள்ளது.

இந்த குளத்தின் நீரேந்து மூலங்களாக கனகராயன் ஆறும் கருமாரி ஆறும் காணப்படுகிறது. இக் குளத்தின் முழுமையான நீரேந்து பிரதேசம் நிலத்தோற்ற அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தினை கொண்டதாக இருந்த போதிலும் அதன் வளப்பயன்பாடு கிளிநொச்சி மாவட்டத்தை சார்ந்ததாகவே உள்ளது.

இரணைமடுக் குளத்தில் இருந்து சுமார் 32.5 மைல்கள் நீளமான வாய்க்கால்கள் ஊடாக பாய்ந்து செல்லும் நீர் வடமாகாணத்தின் தானியக்களஞ்சியமாக கிளிநொச்சியை தக்க வைத்து நிற்கிறது. பொருளாதார தடை போடப்பட்டிருந்த போர்  காலத்திலும் கூட வடக்கு மக்களின் உயிரைக் காத்து நின்றது. இரணைமடு குளம் தந்த நீரினால் விளைந்த உணவினால் என்பதை யாராலும் மறக்க முடியாது. இதனால் இரணைமடுக்  குள அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் திட்டமிடுகின்ற பொழுது சுயநல நோக்கங்கள் தவிர்க்கப்பட்டு தூர நோக்கும் பொது நோக்கும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பது எமது வாதம் எனவே இரணைமடுக் குளத்தின் தற்போதைய அபிவிருத்திப் போக்குகள் தொடர்பிலே நாம் வேறொரு பதிவில் பார்க்கலாம் அதுவரையில் இரணைமடு தந்த கிளிநொச்சிகிளையின் பசுமையை இரசித்திருப்போம்.