இலங்கை – தாய்லாந்து இடையே விசா இன்றி பயணிக்க புதிய ஒப்பந்தம்!
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்த வரைபுக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நேற்று (17) இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதி பேச்சாளர் புளொய்தலே லக்சமீசெங்ஜான் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கு அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், இரு நாடுகளினதும் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி ஒரு பயணத்தில் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை மற்றைய நாட்டில் தங்கியிருக்க முடியும். எனினும், 180 நாட்கள் கொண்ட காலப்பகுதியில் மொத்தமாக 90 நாட்களுக்கு மேல் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 30 நாட்களுக்கு மேல் தங்கியிருத்தல், தொழில் புரிதல், கல்வி கற்றல் மற்றும் முன் அனுமதி அவசியமான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு உரிய விசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் அமைதி, சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடைநிறுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் தமது உள்நாட்டு நடைமுறைகளை நிறைவு செய்தமை தொடர்பான இறுதி எழுத்துமூல அறிவித்தல் கிடைத்த 60ஆவது நாளில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதன் மூலம் இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான சுற்றுலாப் பயணங்கள் இலகுபடுத்தப்படுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மற்றும் கலாசார உறவுகளும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.