தெற்காசிய கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு – இலங்கையில் நான்கு நாடுகள் பங்கேற்ற முக்கிய மாநாடு!
தெற்காசிய கடல்சார் பாதுகாப்பில் உருவாகிவரும் சவால்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில், கொரியா – இலங்கை – அவுஸ்திரேலியா – பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு மாநாடு இன்று (16) நடைபெற்றுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தலைமையில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிராந்திய கடல்சார் ஆய்வு மையத்தில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு, சர்வதேச சட்டம், கடல்சார் சர்ச்சைகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான கொள்கை ரீதியான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
மாநாட்டின் ஆரம்ப உரையை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எயார் வைஸ் மார்ஷல் டபிள்யூ. ஆர். டி. எம். ஐ. இந்திக விக்ரமசிங்க நிகழ்த்தியதுடன், இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் Kim Youn-Jung மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
கொரியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகள், சுங்கத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், கடலோர பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது, பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்புச் சவால்கள், தெற்காசிய கடல் வழிகள் மற்றும் இணைப்புகளுக்கு ஏற்படும் தாக்கங்கள், கடல்சார் சட்டத்தின் கீழான சர்ச்சைகளுக்குத் தீர்வு காணுதல், தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.