பாடசாலை மாணவர்களுக்கும் பங்குச் சந்தையில் முதலீட்டு வாய்ப்பு!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கொழும்பு பங்குச் சந்தையின் நிறைவேற்று உப தலைவர் நிரோஷன் விஜேசுந்தர, மாணவர்களிடையே நிதி அறிவையும் பங்குச் சந்தை தொடர்பான புரிதலையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் 13ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் கொழும்பு பங்குச் சந்தையினால் அறிமுகப்படுத்தப்படும் விசேட பாடநெறியைப் பூர்த்தி செய்து, அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் பரீட்சையிலும் சித்தியடைய வேண்டும்.
அவ்வாறு தகுதி பெறும் மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், நகர்ப்புறப் பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமன்றி, கிராமப்புற மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இவ்வாய்ப்பை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் சிறுவயதிலிருந்தே முதலீடு தொடர்பான நடைமுறை அறிவைப் பெற்றுக்கொள்வதுடன், எதிர்காலத்தில் தொழில்முயற்சியாளர்களாக உருவாகவும், தமது தொழில் முயற்சிகளுக்குத் தேவையான மூலதனத்தைப் பங்குச் சந்தை ஊடாகத் திரட்டிக்கொள்ளவும் அடித்தளம் அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.