22 மில்லியன் மக்களின் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்வில்லை – சஜித் பிரேமதாச விமர்சனம்!
நாட்டின் 22 மில்லியன் மக்களும் எதிர்கொண்டுவரும் பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய எந்தவொரு முன்மொழிவும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை நிறைவடைந்த பின்னர், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி முன்வைத்த புள்ளிவிபரங்களின்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து வருவதுடன், பணவீக்கமும் அதிகரித்து வருவதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
உலகின் பல நாடுகளிலும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளதைப் போன்று, அதே நிலைமை இலங்கையிலும் உருவாகி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி சுமார் ஐந்து மணித்தியாலங்கள் ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரை, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்காத, மனிதநேயமற்ற மற்றும் கிளிப்பிள்ளையைப் போன்ற உரையாக அமைந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச விமர்சித்தார்