அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் முடக்கம் – உலகளவில் மைக்ரோசொப்ட் பயனர்கள் கடும் பாதிப்பு!
உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முக்கியமான இணையச் சேவைகள் முடங்கியுள்ளதால், பெருமளவிலான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் முன்னணி மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் முக்கிய சேவைகளான அவுட்லுக் (Outlook), மைக்ரோசொப்ட் 365 (Microsoft 365), டீம்ஸ் (Teams), மைக்ரோசொப்ட் ஸ்டோர் (Microsoft Store) மற்றும் செயற்கை நுண்ணறிவுச் சேவையான கோபைலட் (Copilot) உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இணையச் சேவைகளின் முடக்கம் தொடர்பான தகவல்களை வழங்கும் டவுன்டிடெக்டர் (Downdetector) இணையதளத்தில், மைக்ரோசொப்ட் சேவைகள் தொடர்பாகப் பெருமளவிலான பயனர்கள் புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கமைய, இலங்கை நேரப்படி இன்று அதிகாலை முதல் குறித்த சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை முடக்கத்தால் உலகளாவிய ரீதியில் தனிநபர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.