இலங்கையில் பயணிகள் ட்ரோன் சோதனை வெற்றி; ட்ரோனில் பறந்த முதல் அமைச்சர் அனுர!

#SriLanka #Colombo #Flight #Project #Drone #Passenger #communication
Abi
21 hours ago
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சோதனை வெற்றி; ட்ரோனில் பறந்த முதல் அமைச்சர் அனுர!

இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோனின் உத்தியோகபூர்வ செயல்விளக்கம் இன்று (11) கொழும்பு துறைமுக நகரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க குறித்த ட்ரோனில் பயணம் செய்தார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ட்ரோனில் பயணம் செய்து தரையிறங்கிய பின்னர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர், “நான் பறப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ட்ரோன்கள் மூலம் வணிக ரீதியிலான பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் அவசரகால சேவைகளுக்காக மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கக்கூடிய (eVTOL) விமானங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்காக E216 ரக இரண்டு பேர் பயணிக்கக்கூடிய ட்ரோன் விமானம் அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 16 விசிறிகள், 12 மின்கலத் தொகுதிகள், மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மத்திய கணினி அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

குறித்த ட்ரோன் மத்திய கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தொலைதூரத்தில் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவசரநிலை மற்றும் தொடர்புத் துண்டிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் தானாகச் செயல்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் ஆறு மாத பரீட்சார்த்த நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், கொழும்பு துறைமுக நகரில் மேலதிக சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் வணிக ரீதியிலான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!