மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதே ஆசிரியர்களின் முக்கிய பொறுப்பு – பிரதமர் ஹரிணி!
ஆசிரியர்கள் வெறுமனே அறிவையும் தகவல்களையும் வழங்குபவர்களாக மாத்திரம் இருக்காமல், தலைமைத்துவப் பண்புகள் நிறைந்தவர்களாகவும், குழுக்களை வழிநடத்தும் திறன் கொண்டவர்களாகவும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்காக, தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பாடத்திட்டங்களைப் புதுப்பிப்பதுடன், உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி, அவற்றை உயர்தரமான கல்வி நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 246 புதிய ஆசிரியர் கல்வி விரிவுரையாளர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, கடந்த நவம்பர் 09ஆம் திகதி இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.