உப்புவெளி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மூவர் கைது
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல்துறை சந்திப்பை நோக்கி, வாடகை முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் பயணித்த இருவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் குறித்து, உப்புவெளி பொலிஸாரும் மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமினரும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்தச் சம்பவம் 2026 நவம்பர் 02 அன்று, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல்துறை பகுதியில் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவினர், இச்சம்பவத்தில் துப்பாக்கிதாரியாகச் செயல்பட்ட சந்தேக நபரை நவம்பர் 06 அன்று திக்வெல்ல பகுதியில் வைத்து கைது செய்தனர். இவர் கொலை முயற்சி மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் ஆவார்.
இதற்கு முன்னதாக, நவம்பர் 02 அன்று 'ஐஸ்' போதைப்பொருள் 32 கிராம் 800 மில்லிகிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள், தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் போது, இந்த இரு சந்தேக நபர்களும் கொலையைச் செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டியதும், குற்றத்தைச் செய்வதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24, 28 மற்றும் 34 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் திக்வெல்ல மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரியாகச் செயல்பட்ட சந்தேக நபர், முன்னதாக இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், முறையான நடைமுறைகளின்படி அவர் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.