இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – பலத்த காற்று வீசும் அபாயம்!
தென் மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் விசேட அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.