கிளிநொச்சியில் 10,800 குடும்பங்களுக்கு மீண்டும் இழப்பீடு பெறும் வாய்ப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (04.11.2026) மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, சொத்தழிவுக்கான இழப்பீடுகள், காணாமல் போனோருக்கான கொடுப்பனவுகள் மற்றும் வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 12,546 குடும்பங்கள் சொத்தழிவுக்கான இழப்பீடுகளைப் பெற்றுள்ளதுடன், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 10,800 குடும்பங்கள் மீண்டும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போனோர் குடும்பங்களாகப் பதிவுசெய்த 1,225 குடும்பங்களில் முதற்கட்டமாக 685 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வன்செயல்களால் உயிரிழந்த மற்றும் கடுங்காயமடைந்த 4,999 பேருக்கு இதுவரை இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இழப்பீடுகள் அல்லது விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் தத்தமது பிரதேச செயலகங்கள் அல்லது மாவட்டச் செயலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.