மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட சிக்கல்களை விரைந்து தீர்க்க வலியுறுத்தல்!
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் நிலவும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதற்குரிய அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அவகாசம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் தேர்தல் நடத்தப்படுவதில் நிலவும் முட்டுக்கட்டைகள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஆணைக்குழு சார்பில் முன்னிலையாகிப் பல முக்கிய யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனச் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு இணையாக, எங்களது தரப்பு யோசனைகளையும் சமர்ப்பித்துள்ளோம்.
முன்வைக்கப்படும் யோசனைகளையும் பரிந்துரைகளையும் விரைவாக ஆராய்ந்து, நாடாளுமன்றம் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் நீண்டகாலமாக இயங்குவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானதாகும்.” எனத் தெரிவித்தார்.