மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2027 வரவு செலவுத் திட்டத்தில் வரிகள் குறைக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு!
எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் வருமான இலக்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மேலும் சில வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து புதிய வரிகள் எதனையும் அறிமுகப்படுத்தவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில வரிகள் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து புதிய வரிகளை விதிக்கவில்லை. மாறாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில வரிகளைக் கணிசமாகக் குறைத்துள்ளோம்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் மேலும் சில வரிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்" எனக் குறிப்பிட்டார்.
முந்தைய அரசாங்கங்கள் தங்களுக்கான வருமான இலக்குகளில் சுமார் 90 சதவீதத்தையே எட்டியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை விஞ்சியுள்ளதாகவும், முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியைப் பேணி வருவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக பணவீக்க அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.