புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: மக்கள் உரிமைகள் தொடர்பில் சர்ச்சை!
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள Protection of the State from Terrorism Bill – 2026 எனப்படும் புதிய சட்டமூலம் தொடர்பில் பல்வேறு மனித உரிமை மற்றும் சிவில் சமூகத் தரப்பினர் கவலைகளை முன்வைத்துள்ளனர்.
தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானதொரு விடயமாக இருந்தாலும், அதன் பெயரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் உருவாக்கப்படக்கூடாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், தன்னிச்சையான கைதுகள், நீண்டகாலத் தடுப்புக்காவல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் நீண்டகாலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
இந்நிலையில், புதிய சட்டமூலத்தின் கீழ் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களின் வரையறைகள் தெளிவாகவும் குறுகியதாகவும் அமைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இல்லையெனில், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டமூலத்தின் 27ஆம் பிரிவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இரண்டு மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கைது செய்யப்படுவோருக்கான சட்ட உதவி, நீதிமன்றத்தை அணுகும் உரிமை, பிணை பெறுவதற்கான வாய்ப்பு மற்றும் தடுப்புக்காவல் தொடர்பான நீதித்துறை கண்காணிப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாதக் குற்றங்களின் வரையறையைத் தெளிவுபடுத்துதல், நீதித்துறை கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் சந்தேகநபர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துதல் ஆகியவை அவற்றில் அடங்குகின்றன.
இந்தச் சட்டமூலம் சிறுபான்மை மக்களுக்கு மாத்திரமன்றி, ஊடகவியலாளர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் உரிமைகளையும் பாதிக்கக்கூடிய வகையில் அமையக்கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னரும், நிறைவேற்றப்படுவதற்கு முன்னரும் அதன் ஒவ்வொரு பிரிவும் விரிவாக ஆராயப்பட வேண்டும் என ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் சார்ந்த தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதுடன், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்துவதே புதிய சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே இவ்விவாதத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.