முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை
யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல்போன மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(29) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இருவரும் காணாமல்போனமை தொடர்பான வழக்கில், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக செப்டம்பர் 29ஆம் திகதி சாட்சியமளிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.
குறித்த சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக முதன்முறையாக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
எனினும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என நீதிமன்றப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி காணொளி தொழில்நுட்பம் ஊடாக தொலைதூரத்தில் இருந்து சாட்சியமளிக்க அனுமதிக்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொலைதூரத்தில் இருந்து சாட்சியமளிக்க அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.