பாகிஸ்தானில் அஜர்பைஜான் நாட்டு பெண் போதைப்பொருள் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
லாகூரில் 20 வயது அஜர்பைஜான் நாட்டுப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
அத்துடன், இக்குற்றத்தைச் செய்ய உடந்தையாக இருந்ததாகக் கூறி, முக்கியச் சந்தேக நபரின் உறவினர்களையும் கைது செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட அப்பெண் உள்ளூர் நீதிபதி முன்னிலையில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறையின் தகவலின்படி, பாகு (Baku) நகரைச் சேர்ந்த அப்பெண், வணிக நோக்கத்திற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வந்து, ராய்விண்ட் (Raiwind) பகுதியில் தங்கியிருந்தார்.
செப்டம்பர் 25 அன்று இரவு, இரண்டு பெண்கள் தன்னை 'டிஃபென்ஸ் ஹவுசிங் அத்தாரிட்டி' (DHA) பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு மூன்று ஆண்கள் அவர்களுடன் இணைந்ததாகவும் அவர் காவல்துறையிடம் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மது அருந்தி தனக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் ஒன்றை வழங்கியதாகவும் அப்பெண் குற்றம் சாட்டினார்.
அந்த மூன்று ஆண்களும் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் காசி இன்டர்சேஞ்ச் (Ghazi Interchange) பகுதிக்கு அருகில் தன்னை விட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மூன்று சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்யக் காவல் துறைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் அகமது தன்வீர், அலி மற்றும் மொஹ்சின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தன்வீர் முக்கியச் சந்தேக நபர் என்றும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.