சோலைவனமாக மாறிய பாலைவனம் - அட்டகாமாவில் அரிய நிகழ்வு
உலகின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றான சிலியின் அட்டகாமா பாலைவனம், தற்போது வண்ணமயமான பூக்களால் நிறைந்து காணப்படுகிறது.
எல் நினோ காலநிலைச் சூழலுடன் தொடர்புடைய கனமழை காரணமாக பாலைவனத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக ஈரப்பதம் ஏற்பட்டதே இந்த அரிய இயற்கை நிகழ்வுக்குக் காரணமாகும்.
பொதுவாக வறண்ட நிலையில் இருக்கும் மண்ணுக்குள் பல ஆண்டுகளாக உறக்க நிலையில் இருந்த விதைகள் மற்றும் கிழங்குகள், போதுமான மழை கிடைத்ததும் முளைத்து மலரத் தொடங்கியுள்ளன.
சுமார் 200 வகையான தாவரங்கள் இந்த நிகழ்வில் வெளிப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஊதா, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் பூக்கள் பாலைவனப் பகுதிகளை அலங்கரித்து வருகின்றன.
இந்த ஆண்டு சில பகுதிகளில் 180 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாகவும், அட்டகாமாவின் ‘பூக்கும் பாலைவனம்’ நிகழ்வு October மாதத்தில் உச்சத்தை அடையக்கூடும் என்றும் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலர்களுடன் பூச்சிகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.