உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு பட்டறை!
“உலக குடியிருப்பு தினத்தை” முன்னிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகளின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பில் முகாமைத்துவ நிறுவன அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு பட்டறை நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கூட்டுரிமை சொத்து முகாமைத்துவ அதிகாரசபை (CMA) ஏற்பாடு செய்த இந்தப் பட்டறை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்துதல், நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்தல் மற்றும் சுகாதாரமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குதல் ஆகியவை இந்தப் பட்டறையின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், பராமரிப்பு பணிகள், பராமரிப்புக் கட்டணங்கள், உறுதிப்பத்திரங்கள் கிடைக்காமை, பதிவு தொடர்பான பிரச்சினைகள், அபிவிருத்தி நிறுவனங்களைப் பதிவு செய்தல், அபிவிருத்தியாளர்களை தரப்படுத்தும் முறை, பொலிஸாரின் ஊடாக சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூட்டுரிமை குடியிருப்பு துறையின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, பொதுவசதிகள் மற்றும் பொதுப் பகுதிகளை முறையாக நிர்வகிப்பதில் பொதுமக்களின் செயற்பாட்டுப் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பிலும் பட்டறையில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி. சரத், கூட்டுரிமை சொத்து முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் நிஷான் நாணாயக்கார, அதன் பணிப்பாளர் நாயகம் கட்டடக்கலை நிபுணர் எம்.டி. கபில பிரியந்த, மேலதிக பணிப்பாளர் நாயகம் நலின் கங்கந்த உள்ளிட்ட அதிகாரிகள், இலங்கை பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், கூட்டுரிமை சொத்து முகாமைத்துவ அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் கூட்டுரிமை குடியிருப்பு குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.