அனோஜன் விவகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாச முக்கிய நடவடிக்கை!
சவூதி அரேபியாவில் சிறையில் உள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
அனோஜனின் தந்தை தம்பிராசா சிவராசா, தாய் ரசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு, அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அவரை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, அனோஜனின் வழக்கு மற்றும் அவரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவருடன் சஜித் பிரேமதாச தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், சவூதி சிறையில் உள்ள அனோஜனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவரது நலம் குறித்தும் அவர் விசாரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அனோஜனை விடுவிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருடனும் சஜித் பிரேமதாச கலந்துரையாடியுள்ளார்.
இனம் அல்லது மத வேறுபாடுகளைக் கடந்து, அனோஜனை விடுவிப்பதற்காக தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.
அனோஜனின் வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
எனினும், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை வெளிவிவகார அமைச்சு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.